திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிறுவனத்தை நிரந்தரமாக மூட 3 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட நிறுவனத்தை நிரந்தரமாக மூட 3 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அபாயகரமான ரசாயனங்களை பயன்படுத்தும் 1,774 ஆலைகளை ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜூன் 21ம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட கடுமையான அம்மோனியா வாயு கசிவு காரணமாக இதுவரை 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாயு கசிவு ஏற்பட்டதற்கான தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் ஆலையின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தீவிர ஆய்வு நடத்திய நிபுணர் குழு, இந்த ஆலையை நிரந்தரமாக மூட பரிந்துரைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (DISH), தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் (TNPCB), மற்றும் பொதுச் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் (DPH) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் 1,774 ஆலைகளை முழுமையாக ஆய்வு செய்யவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. முதற்கட்ட அறிக்கைகளின்படி, இந்த ஆலையில் அலாரங்கள் ஒலிக்காதது மற்றும் தொழிலாளர்களுக்கு அவசரகாலப் பயிற்சிகள் வழங்கப்படாதது போன்ற பல கடுமையான பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த விவகாரத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இதுபோன்ற அபாயகரமான ஆலைகளில் பாதுகாப்புத் தரக் கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

Related Stories: