பெங்களூரு: மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை பரப்பியதாக நடிகை ருக்மிணி வசந்த் அளித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தில் நடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த். இவரது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வந்தனர். இது தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும், தனியுரிமையை மீறி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறி ருக்மிணி வசந்த் பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைதானவர்கள் பாகல்கோட்டை சேர்ந்த ரவிகுமார் (24), சிமோகா மாவட்டத்தை சேர்ந்த சந்திரகாந்த் (33) மற்றும் பெங்களூருவை சேர்ந்த ரஞ்சித் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 செல்போன் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
