×

மேகதாது திட்டம் எங்கள் எல்லைக்குள் நாங்கள் செயல்படுத்த விரும்பும் ஒன்று.!! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், “மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இதற்கு மத்திய அரசு மற்றும் நீர்ப்பாசனத் துறையின் அனுமதி மட்டுமே தேவை. மேகதாது என்பது எங்கள் எல்லைக்குள் நாங்கள் செயல்படுத்த விரும்பும் ஒரு திட்டம்” என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி இருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படியிருந்தும் தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கின்றது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மேகதாது திட்டம் கர்நாடகா மற்றும் தமிழகம் என இரு மாநிலங்களுக்குமே பெரும் பயனளிக்க கூடியது. நாங்கள் அணை கட்டினால் தேக்கும் நீரை குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துவோம்; பாசனத்திற்கான நீர் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் தடையின்றி கிடைக்கும். எனவே இத்திட்டத்திற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை எட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் கூறி இருக்கிறார்.

இதனிடையே மேகதாது விவகாரத்தில் நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசியல் கட்சியினரிடம் அமைச்சர் ராமலிங்க ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Minister ,Water Department of Karnataka ,Bangalore ,Tamil Nadu Assembly ,Megadatu ,Megadadu Dam ,Federal Government ,Irrigation Department ,
× RELATED மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே...