இந்த மாதமே வரவு வைக்கப்படும்; பிஎப் வட்டி விகிதம் 8.25%: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) டெபாசிட்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டியை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பலன் பெறுவார்கள். இந்த தொகை இந்த மாதத்திலேயே வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎப் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஒன்றிய அறங்காவலர் குழு, கடந்த மார்ச் 2ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகத் தொடர முடிவு செய்தது. இந்த பரிந்துரைக்கு தற்போது ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது ஆண்டாக 8.25 சதவீத வட்டி விகிதம் நீடிக்கிறது. இதற்கு முன் 2024-25 மற்றும் 2023-24 நிதியாண்டுகளிலும் இதே வட்டி விகிதம் வழங்கப்பட்டது. புதிய டிஜிட்டல் அமைப்பு காரணமாக, இனி வட்டி தொகை உறுப்பினர்களின் கணக்குகளில் விரைவாக வரவு செய்யப்படும் என பிஎப் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2021-22 நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு 8.10 சதவீதமாகக் குறைத்தது. இது சுமார் 40 ஆண்டில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதமாக அமைந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதம் நடப்பு மாதத்திலேயே வரவு வைக்கப்படும் என்பது பிஎப் நிதியை நம்பியுள்ள ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: