×

குமரியில் கன்னிப்பூ சாகுபடி பணி தீவிரம்

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. நெல் சாகுபடி செய்யும்போது பொடி விதைப்பு, தொழிவிதைப்பு, ஆட்களை கொண்டு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்து நடவு செய்வது, இயந்திர நடவு, டிரம்சீலர் நடவு என பலவிதமாக நடவு செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிக்காக பேச்சிப்பாறை அணை கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்தது. இதனால் மழை தண்ணீர் மற்றும் அணையில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பறக்கை, சுசீந்திரம் பகுதியிலும் நடவு பணி தொடங்கியது. தற்போது அங்கு அடி உரம் போடப்பட்டு வருகிறது. அணை திறப்பதற்கு முன்பு குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் அணை திறப்பு மற்றும் பருவமழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர். தற்போது அணை திறக்கப்பட்ட நிலையில் பருவமழையும் பெய்து வருவதால், சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஒரு வார காலம் மழை பெய்த நிலையில் கடந்த 3 நாட்கள் மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல பகுதிகளில் வயல்களை உழுது நடவு பணிகள் நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் தற்போது நடவு பணிக்கு தேவையான ஆட்கள் கிடைக்காத நிலையில் பல்வேறு முறைகளில் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிக விவசாயிகள் இயந்திர நடவு பணியை முன்னெடுத்துள்ளனர். கடந்த வருடம் இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது. இயந்திர நடவு செய்யும் போது அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண்மை அதிகாரிகள் கூறிவருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட பல விவசாயிக்ள இயந்திர நடவுக்கு மாறிவிட்டனர். இது குறித்து முன்னோடி விவசாயி செண்பக சேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த காலத்தில் சாகுபடி பணிக்கு தேவைக்கு அதிகமாக தொழிலாளர்கள் கிடைத்தனர்.

தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாம் நினைத்த நேரத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தொழிலாளர்களின் பற்றாக்குறையால் பல விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயந்திர நடவு பணிகளை செய்து வருகின்றனர். நாற்றங்கால் தயாரித்து 14 நாட்களில் நடவு பணி முடிந்துவிடும். நடவு செய்யும்போது போதிய இடைவெளியுடன் ஏக்கருக்கு 60 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்துவிடும். இதனால் உரம் போடுவதற்கு, களை எடுப்பதற்கு வசதியாக இருக்கும். மேலும் மகசூல் அதிகமாககிடைக்கும். என்றார்.

பறவைகளால் சேதம்
நெல் சாகுபடி செய்யும்போது நேரடி விதைப்பு செய்யும்போது புறாக்கள் அதிக அளவு வயல்களில் இறங்கி நெல்களை உணவாக எடுத்துச்செல்கின்றன. அதனை மீறி நெற்பயிர்கள் வளரும்போது அரிவாள் முக்கன் பறவைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பறவைகள் நெற்பயிரின் இழம் தளிர்களை உட்கொள்கிறது. மேலும் பயிர்களை மிதித்து நாசமும் செய்கிறது. இந்த பறவைகள் வயல்களில் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Kumari ,NAGARGO ,KUMARI DISTRICT ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப்...