×

தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வினைக் கோர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்

 

உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாக பெற சட்ட வல்லுநர்கள் சிறப்புக்குழு

சென்னை: தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வினைக் கோர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாக பெறுற சட்ட வல்லுநர்கள் சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது: அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்.வழியில் ஜனநாயகத்தின் மேன்மையை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நடைமுறைப்படுத்தும். ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்.

அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்கும், மாநில உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், மாநிலங்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பெரும் முனைப்புடன் இந்த அரசு செயல்படும்.

பொது அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துவது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மகளிர் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இந்த அரசின் முதன்மையான லட்சியமாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு மிகக் கடுமையான, கண்டிப்பான, விரைவான நடவடிக்கைகள் எடுத்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரும்.

மாநிலத்தில் உள்ள கனிமவளங்களை திறம்படவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் நீடித்த காலத்திற்குப் பயன்படுத்தப்படுவதையும் இந்த அரசு உறுதி செய்யும். அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் திசைமாறிச் செல்வதைத் தடுத்து, அது முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதற்காக, முறையான ஒழுங்குமுறை மற்றும் அமலாக்கத்தின் மூலம் திட்டமிட்ட சட்டவிரோத கனிமத் தொழிலும், வரி ஏய்ப்பும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளின் வாயிலாக, கனிமங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Legislative Assembly ,Tamil Nadu ,Supreme Court ,Chennai ,
× RELATED பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்