×

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்

 

சென்னை: தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 9.30 மணி முதல் சட்டப் பேரவைக்கு வந்தனர். எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 9.55 மணிக்கு சட்டப் பேரவைக்கு வந்தார். அவரை திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். 9.57 மணிக்கு முதல்வர் விஜய் சட்டப் பேரவைக்கு வந்தார். அவர் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன் வரிசையில் இருந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார். முன்னதாக தமிழக ஆளுநர் அர்லேகர் 9.52 மணிக்கு தலைமை செயலக வளாகத்துக்குள் வந்தார். அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் போலீஸ் வாத்திய குழுவினர் இசைத்து அவரை வரவேற்றனர். அப்போது போலீசார் நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். 9.59 மணிக்கு சட்டப் பேரவை வளாகத்துக்குள் வந்தார். சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார். அவரது அருகில் உள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் அவர் அமர்ந்து கொண்டார். சரியாக 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து ஆளுநர் அர்லேகர் கவர்னர் உரையை வணக்கம் என்று தமிழில் கூறி ஆங்கிலத்தில் படிக்க தொடங்கினார். சரியாக 10.39 மணிக்கு ஆங்கில உரையை படித்து முடித்தார்.

அதை தொடர்ந்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் 10.39 மணிக்கு படிக்க தொடங்கினார். தமிழ் உரையை 11.10 மணிக்கு படித்து முடித்தார். இதையடுத்து மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இன்றைய சட்டப் பேரவை கூட்டம் சரியாக 11.11 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டம் மொத்தம் 1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்றது. பின்னர் ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து பேரவையில் இருந்து விடை பெற்று சென்றார்.

ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தேநீர் விருந்து கொடுத்து கவுரவித்தார். இதையடுத்து தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு ஆளுநர் புறப்பட்டு சென்றார்.

Tags : Chennai ,Tamil ,Nadu ,17th Assembly Meeting ,Council ,
× RELATED பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்