×

காசிமேடு மீனவர்கள் ஆந்திராவில் கைது – சென்னையில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை

சென்னை: சென்னை காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் காசிமேடு மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

காசிமேடு விசைப்படகுகள் ஆந்திர கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த விசைபடகு உரிமையாளர்கள் கணேசன் மற்றும் கர்ணன் என்பவருக்கு சொந்தமான 2 விசைபடகுகளில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்ற கடந்த 15 ஆம் தேதி 19 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற இவர்களை, ஆந்திர கடல்சார் (மரைன்) போலீசார் சிறைபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 19 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திரா ஜுவ்வாலதிண்ணெ துறைமுகத்திலேயே படகுகளில் வைத்து சிறைபிடித்தனர். இந்த தகவலை அறிந்த காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் மிகவும் கொந்தளிப்புடன் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று, தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே 61 நாட்கள் தடைக்காலம் நிறைவுபெற்று மீன்பிடிக்க சென்ற தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கபட்டு இருக்கும் விசைப்படகுகளையும் , மீனவர்களையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.

புதுவை மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர பகுதியில் தாராளமாக மீன்பிடிக்கும் போது, எல்லைப் பகுதியில் மீன்பிடித்த தங்களை மட்டும் கைது செய்வது என்ன நியாயம் என்றும், இச்சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மௌனம் காப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் காசிமேடு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Kasimedu ,Andhra Pradesh ,Fisheries Department ,Chennai ,Kasimedu, Chennai ,Andhra Pradesh Navy ,
× RELATED பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்