×

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. எனினும் வழக்கத்திற்கு மாறாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு, உடனே தேசியகீதம் பாடப்பட்டது. பின்னர் பேரவையில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு ஆளுநர் அர்லேகர் தனது உரையை துவக்கினார்.

அண்ணா, எம்ஜிஆர்-க்கு பின் விஜய் புரட்சி செய்து உள்ளதாக தனது உரையில் குறிப்பிட்ட ஆளுநர், மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு உள்ளிட்டவையே தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் என்று குறிப்பிட்டார். கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. என்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் மைனாரிட்டியாக இருந்ததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. ஒரு வழியாக, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், தவெக ஆட்சி நடத்த பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12வது முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அடுத்த நாள் (மே 11) தமிழக சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மு.வெ.கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Legislature ,Taweka ,Chief Minister ,Vijay ,
× RELATED தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!