×

தமிழகத்தின் கடனளவு ரூ.13.18 லட்சம் கோடி; ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது: வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றப்போது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து விரைவில் வெள்ைள அறிக்கை வெளியிடப்படும் என கடந்த மே மாதம் அறிவித்தார். இதையடுத்து நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ள அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்சம் சொந்த வரி வசூல் முயற்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை இல்லாத குறைந்தபட்சம் மூலதன செலவு 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டாய செலவுகள் 64.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடன் 28.3 சதவீத அளவிலேயே நிலைத்துள்ளது. ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன், ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை, ஜி.எஸ்.டியில் சொத்து வரி வருவாய், சொந்த வரி வருவாய் 5.45 சதவீதம், ஒவ்வொரு வருவாய் ரூபாயிலும் ரூ.22.8 பைசா வட்டி செலுத்தவே செல்கிறது. வருவாயிலிருந்து 64.4 சதவீதம் ஏற்கனவே கட்டாய செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான நிதி சார் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்கிறது. இந்த 5 ஆண்டு காலப்பகுதியில் மட்டும் தமிழ்நாடு ரூ.4.87 லட்சம் கோடி புதிய கடனை சேர்த்துள்ளது. கடன் ஆண்டு சராசரியாக 14.3 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆனால், மூலதன முதலீடு வெறும் 8.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் ரூ.5 லட்சம் கோடியிலிருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியிலிருந்து ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்திலிருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த நிலுவைக் கடன், மாநிலத்தின் ஜிடிபியில் 28.7 சதவீதத்திலிருந்து 28.3 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடியாக உள்ளது. வட்டி, சம்பளம், ஓய்வூதியத்திற்காக மாநிலத்தின் 64 சதவீத நிதி செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டின் தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 ஆக உள்ளது. ஆண்டு வட்டி செலவு ரூ.67,050 கோடியாக உயர்ந்த மாநிலத்தின் மொத்த மூலதன செலவு திட்டமான ரூ.50,911 கோடியாக மிஞ்சியுள்ளது. வட்டி செலவு மொத்த வருவாயில் 22.8 சதவீதம் உள்ளது. தமிழ்நாட்டின் சொந்த வருவாயில் 34.8 வட்டி செலவிற்கு செல்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் வட்டி செலவு 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி பகிர்வு 6.64 சதவீதத்திலிருந்து 4.09 சதவீதமா குறைந்துள்ள. முத்திரைத் தாள் கட்டணம், சந்தை மதிப்பை விட குறைவாக உள்ளது. 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கான ஒன்றிய அரசின் மானியங்கள் 15.26 சதவீதம் குறைந்துள்ளது. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி ஆகிய செலவுகளுக்காக கடந்த ஓராண்டில் ரூ.1,89,115 கோடியாகிறது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம். மூலதனச் செலவுகளை விட வட்டிச் செலவுகள் அதிகமாக உள்ளது. அரசு கொள்முதல் செலவைக் குறைத்தல், நேர்மையான, நம்பகமான வரவு செலவு திட்டமிடல் போன்றவை வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும்.

தமிழை தவிக்க விட்ட நிதியமைச்சர்
தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டு, நிருபர்களிடம் கலந்துரையாடினார். அப்போது தமிழை தவிக்க விட்ட நிதியமைச்சர் பேச்சை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். குறிப்பாக நிதிக்கு, நீதி பற்றாக்குறை எனவும், நேர்மறையாகக்கு பதிலாக நேர்முறையாக எனவும், கட்டமைப்பு பின்னடைவு என்பதற்கு கண்ட்டமைப்பு எனவும் பேசினார். பார்த்துப் படிக்கும் அறிக்கையை கூட தவறாகப் படிப்பதா என இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘தமிழ்நாட்டின் பெருமையே மக்கள் நலத் திட்டங்கள்தான், அவை நிறுத்தப்படாது’
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் அரசு அவ்வளவு எளிதாக மூடிவிடாது. மக்களின் நலனே அரசின் முதன்மை குறிக்கோள். தற்போதுள்ள நிதிச் சூழலை எதிர்கொள்ள, அரசுக்குக் கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கான வழிகளைத் தேடுவதே தற்போதைய ஒரே தீர்வாக அமையும். பல்வேறு வருவாய் துறைகளில் உள்ள கசிவுகள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை முறைப்படுத்துவதன் மூலம் வருவாயை மேம்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்கள் என்பது தமிழ்நாட்டின் பெருமையாகும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்களைக் கடந்து, வருவாயைப் பெருக்குவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது
வெள்ளை அறிக்கை வெளியீட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. ஆனால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது. வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. மேலும், இந்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனும், மாநிலங்களால் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

Tags : Tamil Nadu ,EU ,Chennai ,Vijay ,Finance Minister ,Mariya Wilson ,Finance Management of Tamil Nadu ,Chennai Chief Secretariat ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட...