×

தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மீது மதுரை சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய ஊழியர்கள் ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுரை சிபிஐ துணை கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு: துறைமுக ஆணைய ஓய்வூதியர் பிரிவில் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றும் ஊழியர்கள் கிஷோர் பாபு, மணிகண்டன் பிரபு ஆகியோர், திருச்சி ரங்கத்தை சேர்ந்த முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, சென்னை குரோம்பேட்டை, நேரு நகரை சேர்ந்த கணக்கு அலுவலர் நிலை-2 பழனி குமாரசுவாமி, மின்னணுத் தரவு செயலாக்க அலுவலர் ரோஜர்ஸ் ஜெ.துரைராஜ், மின்னணு தரவு செயலாக்கத்துறை உதவி இயக்குனர் காளியப்பன், முதுநிலை உதவியாளர் சந்தனசங்கர் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டு ஓய்வூதியதாரர்களின் இறப்பு சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்கள், வங்கி கணக்கு உள்ள செல்போன் விவரங்கள் போன்ற மின்னணு தரவுகளை மாற்றி அமைத்து, அதன் மூலம் தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஒன்றிய அரசின் ஒய்வூதிய பணத்ைத மாற்றி அனுப்பி 2017 முதல் 2024 வரை இறந்த ஓய்வூதியதாரர்கள் 27 பேரின் வங்கி கணக்கு எண்ணை கம்ப்யூட்டர் சர்வரில் மாற்றி, அவர்களின் ஓய்வூதியத்தை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் பெயரில் மோசடியாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றி மார்ச் 2024 வரை ரூ.4 கோடியே 51 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து 4 அதிகாரிகள் உள்பட 7 பேர் மீதும் மோசடி, ஊழல், ஆவணங்களை மாற்றுதல், போலி ஆவணங்களை தயாரித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 21 பிரிவுகளின் கீழ் மதுரை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 4 அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை செய்துள்ளனர். இதில் முக்கிய ஆவணங்கள், மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள், டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்புடைய ஒருவரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள், ஏற்கனவே ரூ.1.50 கோடி பறிமுதல் செய்த தகவலும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவர் சஸ்பெண்ட் ஆனவர்; மற்றொருவர் ஓய்வு பெற்றவர்
சிபிஐ வழக்கு பதிந்துள்ள தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கடந்த ஆண்ேட ஓய்வு பெற்றுள்ளார். அதற்கு முன்னரே பல்வேறு குற்றசாட்டுகளின் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் தனது ஓய்வூதிய பணப்பலன்களை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்த பழனிக்குமாரசாமியும் கடந்த ஆண்டே ஓய்வு பெற்றுள்ளார். வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவரும் தற்போது பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Union ,Tuticorin ,Thoothukudi ,Tuthukudi Wauxi Port Authority ,Madurai CBI ,
× RELATED மல்லிகை பார்சலில் வெடி வெடித்து கல்லூரி மாணவி விரல் துண்டானது