×

அதிமுக தலைமை அலுவலக கதவை கடப்பாரையால் உடைத்து ஆவணங்கள் திருடிய விவகாரம்; ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு: சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் வழக்கில் இருந்து விடுவிப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலக கதவை கடப்பாரையால் உடைத்து, ஆவணங்கள் திருடியதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், தற்போது சபாநாயகராக உள்ள ஜேசிடி.பிரபாகர் பெயரை நீக்கிவிட்டு ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு ெசய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பும் தனித்தனியாக பிரிந்தனர். அப்போது, எடப்பாடி தலைமையில் கடந்த 2022 ஜூலை 11ம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த நேரத்தில் ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வதாக அறிவித்தார். அதேநேரம் அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இதனை சமாளிக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். அதை அறிந்த எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடுவதை தடுக்க முயன்றனர். அந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவர் வரும் போது அவ்வை சண்முகம் சாலை அருகே எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக அலுவலக வாசலில் எடப்பாடி – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மாறி மாறி மோதிக் கொண்டனர்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை கடப்பாரையால் அடித்து உடைத்தனர். பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலகம் மேலே ஏறி ஜெயலலிதா போல கையை அசைத்து அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய கோப்புகள், சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அள்ளி சென்று வாகனத்தில் ஏற்றினர். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தை முழுமையாக கைப்பற்றினர்.

இதுதொடர்பாக அப்போது சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தை உடைத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாகவும், எடப்பாடி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியதாகவும் புகார் அளித்தார். புகாரின்படி ராயப்பேட்டை போலீசார் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் தங்களது வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி தரப்பினர் மீது புகார் அளித்தனர். இந்த இரண்டு புகார்கள் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த மோதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது 4 ஆண்டுகள் கழித்து சிபிசிஐடி போலீசார் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், எடப்பாடி சார்பில் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி.பிரபாகர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து தாக்கியதாக வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்து இருந்தார். ஆனால் சிபிசிஐடி போலீசார் தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தவெக வில் இணைந்து ஆயிரம்விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும், தவெக அரசில் சபாநாயகராக உள்ள ஜேசிடி.பிரபாகரை இந்த வழக்கில் இருந்து நீக்கும் வகையில் அவரது பெயரை சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேநேரம் தற்போது திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ள ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலகத்தின் பிரச்னைக்கு முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்ட ஜேசிடி.பிரபாகர் பெயர் சேர்க்கவில்லை. இதனால் தவெக அரசு சபாநாயகராக உள்ள ஜேசிடி.பிரபாகரை பாதுகாக்கும் வகையில் அவரது பெயரை நீக்கியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,OPS ,Vaidyalingam ,Speaker ,JCT.Prabhagar ,Chennai ,CBCID ,Manoj… ,
× RELATED 10ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்...