×

ராயபுரம், கன்னியாகுமரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தவெக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றியை எதிர்த்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.வி.விஜய் தாமு திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சுபேர்கானை விட 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர்கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம், திமுக வேட்பாளர் ஆர்.மகேஷை விட 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் ஆர்.மகேஷ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, தற்போது ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதி வாக்காளர் காந்திமதி நாதன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இசக்கி சுப்பையா, காங்கிரஸ் வேட்பாளர் துரையை விட 10,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற போதும், ஊழல் நடவடிக்கை மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. நேற்று மட்டும் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட 4 பேர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஓட்டில் தோல்வி பெரிய கருப்பனும் வழக்கு
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளரான பெரிய கருப்பனை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று பெற்றி பெற்றார்.

இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டது. இது எனது வெற்றியை பாதித்துள்ளது.

எனவே, திருப்பத்தூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தவெக எம்.எல்.ஏ. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்தது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பெரிய கருப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Lawyapuram ,Kanyakumari ,Ambasamutram ,Daveka ,Adimuga ,Chennai High ,Court ,Chennai ,Rayapuram Taveka ,M. L. A. Vijay Thamu ,Adimuka ,M. L. A. Thalavai Sundaram ,M. ,Chennai High Court ,Izaki Supbaia ,
× RELATED தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத...