பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தையை போலீசார் கைது செய்தனர். அமாவாசை நாளில் நரபலி கொடுத்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ்வர்(35), திருப்பூர் பனியன் கம்பெனி ஊழியர். அதே கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் ஆஷா(30). இருவருக்கும் திருமணமாகி கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக மீண்டும் சேர்ந்து திருப்பூரில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையில் இவர்களின் 6 வயது மகன் முகிலன் கடந்த 5 ஆண்டாக பேரணாம்பட்டு டி.டி. மோட்டூரில் உள்ள ஆஷாவின் தாய் விஜயா வீட்டில் வசித்துள்ளார்.
கடந்த 40 நாட்களாக மேல்பட்டியில் உள்ள ராஜேஷின் தாய் விஜயா மற்றும் அவரின் மகள் ரேவதி வீட்டில் பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுவன் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்ததாக சடலத்தை வைத்து சோகத்துடன் அமர்ந்திருந்தனர். தகவலறிந்த மேல்பட்டி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் பாட்டி விஜயா (ராஜேஷின் தாய்) மற்றும் அவரது மகள் ரேவதி மாந்த்ரீகம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், வீடு முழுவதும் மாந்திரீகம் தொடர்பான பொருட்கள், தெருவில் உள்ள பொது கிணற்றில் மாந்திரீக பொருட்களை வீசுவது போன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமாவாசையான நேற்றுமுன்தினம் சிறுவனை நரபலி கொடுத்திருக்கலாம் என்று உறவினர்களும் அந்த பகுதி மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் தாய் வழி உறவினர்கள் போலீசாரிடம் கூறியதாவது: இரவு தொலைபேசியில் எனது பேரன் முகிலன் கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக கூறினர்கள். நாங்கள் சென்று பார்த்தபோது வீட்டில் சடலமாக கிடத்தியிருந்தனர். தலை நசுங்கி, உடலில் காயங்கள் இருந்தது. இதனால் எனது பேரனை அடித்து கொலை செய்துள்ளார்கள். எனது மகள் ஆஷாவையும் ஏதாவது செய்து விடுவார்களோ? என்று அச்சமாக உள்ளது. விஜயா, ரேவதியிடம் கேட்டால் சுவர் மீது ஏறி கீழே விழுந்ததில் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
அதில் உண்மை இல்லை. அவர்கள் மாந்திரீகம் செய்பவர்கள் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். அது குறித்தும் காவல்துறை விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து விஜயாவின் மகள் ரேவதியை நேற்று கைது செய்து பேரணாம்பட்டு மற்றும் மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி கூறுகையில், எனது தம்பி ராஜேசுக்கும் மனைவி ஆஷாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. அதற்கு காரணம் சிறுவன் முகிலன் என்பதால், அவனை தினமும் சித்ரவதை செய்து அடித்து வந்தேன். நேற்று முன்தினம் முகிலனை சரமாரியாக அடித்து துன்புறுத்தியதில் மயங்கி மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து விட்டான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று கூறி, சுவரில் ஏறி விழுந்ததில் உயிர் இழந்து விட்டான் என்று போலீசாரிடம் கூறினேன் என்றார்.
இதையடுத்து மேல்பட்டி போலீசார் ரேவதி மீது கொலை வழக்கு பதிந்தனர். இந்த ெகாலையில் அவரது தாயார் விஜயாவிற்கும் தொடர்பு உள்ளதா? என்று, நரபலி கொடுத்தார்களா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
