மதுராந்தகத்தில் இன்று மாலை தவெகவில் மாற்று கட்சியின் 25 ஆயிரம் பேர் இணையும் விழா: முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஏற்பாடு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மரகதம் குமரவேல் ஏற்பாட்டில், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஓட்டல் ஹைவே இன் எதிரே, இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த இணைப்பு விழாவுக்காக, அப்பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அங்கு 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. மேலும், அங்கு ஏராளமான மின்விளக்குகள் மற்றும் தவெகவின் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் தவெக பொது செயலாளருமான புஸ்ஸி என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் தவெக தலைமை கழக ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தவெக செயலாளருமான த.சரத்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தவெக செயலாளர் எம்.எஸ்.பாலாஜி உள்பட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இதில் தவெகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். அப்பகுதி முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Stories: