×

தானம் செய்யப்பட்ட ஆண்களின் உடல் குறித்து கிண்டல்; மருத்துவ மாணவியின் ஆபாச பேச்சால் சர்ச்சை: கல்லூரி நிர்வாகம் அதிரடி; போலீஸ் வழக்கு

 

மும்பை: மருத்துவப் படிப்பிற்காக தானம் செய்யப்பட்ட உடல்கள் குறித்து நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆபாசமாகப் பேசிய மருத்துவ மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கே.இ.எம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்று வரும் மாணவி செஜல் பவார், சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பிரனீத் மோர் நடத்திய ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் போது, மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாகப் பெறப்படும் ஆண்களின் சடலங்கள் மற்றும் அவற்றின் மர்ம உறுப்பு அளவுகளை ஒப்பிட்டு மாணவி செஜல் பவார் மிகவும் ஆபாசமாகவும், தரம் தாழ்ந்த முறையிலும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுமார் 1 மணிநேரம் நடந்த அந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ காட்சி மட்டும் இணையத்தில் வைரலான நிலையில், மருத்துவ உலகினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்பின் அடிப்படையாகக் கருதப்படும் உடற்கூறு ஆய்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் மாணவி பேசியதாகக் கூறி, கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் அனிதா சலாக் மற்றும் டாக்டர் ஸ்ரத்தா மோர் ஆகியோர் அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவி தனது செயலுக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் அளித்த போதிலும், சடலங்களை அவமதிக்கும் வகையில் பேசியது மருத்துவத் துறையினரின் மனதைப் புண்படுத்தியுள்ளதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் இந்த விவகாரத்தில் அதிரடியாகத் தலையிட்டு, நகைச்சுவை நடிகர் பிரனீத் மோர், ஹிமான்ஷு ஜங்ரா மற்றும் மாணவி செஜல் பவார் உள்ளிட்டோர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா உறைவிட மருத்துவர்கள் சங்கமும் மாணவியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mumbai ,Sejal Pawar ,MBBS ,KEM Medical College ,Mumbai, Maharashtra ,
× RELATED இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக...