உலகில் சமநிலையை அருளும் அம்பிகையின் உன்னத நாமங்கள்

244. சராசர ஜகந்நாதா
245. சக்ரராஜ நிகேதநா
246. பார்வதீ
247. பத்ம நயநா
248. பத்மராக ஸமப்ரபா
சராசர ஜகந்நாதா – பொதுவாக ஜகந்நாத என்றால் ஆண்பால் பெயராகத்தான் கேள்விப்பட்டிருப்போம். அதாவது குறிலில் முடிந்தால் ஆண்பால். இதே பெயர் நெடிலில் உச்சரிக்கப்பட்டால் ஜகந்நாதா என்றால் பெண் பாலில் வரும். இதில் நாதா என்றால் தலைவி என்று அர்த்தம். ஜகந்நாதா என்றால் இந்த உலகத்திற்குத் தலைவி என்று பொருள்.
சராசர வஸ்துக்கள் அனைத்திற்கும் தலைவி என்று அர்த்தம். சரா என்றால் நகர்ந்து கொண்டே இருக்கக் கூடிய வஸ்துக்கள். அசரம் என்றால் நகராமல் ஒரே இடத்திலிருக்கக் கூடிய வஸ்துக்கள். இதை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சராசரம் என்று வரும். இன்னும் சமஸ்கிருதத்தில் சொல்லப் புகுந்தால் ஸ்தாவரம் – ஜங்கமம். ஸ்தாவரம் என்றால் நிலையாக இருக்கக் கூடியது. ஜங்கமம் என்றால் நகரக் கூடியது. தமிழில் தாவர சங்கமம் என்று வரும். நகராத, நகரக் கூடிய வஸ்துக்கள் என்பதாகும்.
இந்த மொத்த உலகமுமே இந்த இரண்டு பதங்களுக்குள் அடங்கி விடும். உயிருள்ளது, உயிரற்றது என்றெல்லாமும் போகாமல் மிகமிக அடிப்படையில் நகரக் கூடியது, நகராதது என்று பிரிக்கலாம். இப்படி இந்த இரண்டுக்குமே அம்பிகையே தலைவியாக, ஆதாரமாக இருப்பதால் சராசர ஜகந்நாத என்று ஸஹஸ்ரநாமம் வர்ணிக்கின்றது. வானம், விலங்கு, மரம், மலை, நெருப்பு, காற்று மனிதன் என்று எல்லாமும் எப்படி எப்படி இருக்க வேண்டு மென்று அது நிர்ணயித்திருக்கிறதோ அப்படித்தான் அவையெல்லாம் இருக்கின்றன.
பஞ்ச பூதங்களையே எடுத்துக் கொண்டால் நீரானது ஓரிடத்தில் சரம் என்று சொல்வதுபோல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு இடத்தில் அசரம் என்பதுபோல நிலையாக கடல்போல் நின்றபடி இருக்கின்றது. இதேபோல்தான் காற்றும் இருக்கிறது. இவையெல்லாமுமே அவள் நிர்ணயித்தபடியாகவும் இருக்கிறது.
சக்ரராஜ நிகேதநா – மேலே சொன்ன அனைத்தும் யாரெனில் அவளே சக்ரராஜ நிகேதனா ஆவாள். ஸ்ரீ நகரத்தில்ஸ்ரீ சக்ர சிம்மாசனத்தில் யார் இருக்கிறாளோ, அதன் மத்தியில் யார் வாசம் செய்கிறாளோ, இந்த மனோ வாக்கு காயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டுஸ்ரீ சக்ரத்தில் மத்தியில் வாசம் செய்பவளாக இருக்கிறாள்.
இதற்கு இன்னொரு அர்த்தம் என்னவெனில்,ஸ்ரீ சக்ரத்தில் மத்தியில் வாசம் செய்தாலும் கூட, நமக்காக காருண்யத்தினால் இந்த சராசர பிரபஞ்சத்திற்குள் இறங்கி வந்து வியாபித்திருக்கிறாள்.
இன்னொரு பொருள் என்னவெனில், இந்த ஒட்டுமொத்த சராசர பிரபஞ்சம் முழுவதையுமே அவள் சக்ர ராஜமாக கொண்டிருக்கிறாள். இதன் மத்தியில் அதன் அந்தர்யாமியாக இருந்து கொண்டு வழிநடத்திக் கொண்டிருக்கிறாள். அதனால், அம்பிகைக்கு சக்ரராஜ நிகேதனா என்று பொருள்.
பார்வதீ – இந்த நாமமானது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இதற்கு வெளிப் படையான அர்த்தம் என்னவெனில், பர்வத ராஜனாக இருக்கக் கூடிய ஹிமவானுடைய புத்திரியாக இருப்பதால் அவளுக்கு பார்வதி என்று பெயர்.
சென்ற இரண்டு நாமங்களில் அண்டமெல்லாம் இருப்பவளாகவும், ஸ்ரீ சக்ரத்தில் இருப்பதாகவும் வர்ணித்து விட்டு இப்போது இன்னும் கீழேவந்து நமக்காக பார்வதியாக அவதாரமாகவும் இறங்கி வருகின்றது. தாட்சாயணீ, மாதங்கி, காத்யாயனி என்பதெல்லாம் அம்பாளின் அவதாரங்கள்.
பத்ம நயனா – இந்த நாமத்திற்கு தாமரைப் பூபோன்ற கண்களை உடையவள். சாந்தோக்கிய உபநிஷதத்தில் பிரம்மத்திற்கு லட்சணம் சொல்லும்போது, புண்டரீக மேவ அக்ஷிணீ என்று சொல்கிறது. தாமரைபோன்ற கண்களை உடையது பிரம்மம் என்று அம்பாளை வசின்யாதி வாக்தேவதைகள் வர்ணிக்கிறார்கள். ஏனெனில், உபநிஷதத்தில் சொல்லப்படும் வஸ்துதான் இங்கு லலிதாம்பிகையாக இருக்கிறாள்.
இங்கு இன்னொரு விஷயமும் காண்பித்துக் கொடுக்கப்படுகிறது. அதாவது பிரம்மம் நிர்குணமாகவும் இருக்கும். சகுணமாகவும் இருக்கும். சகுண நிர்குணமாகவும் இருக்கும். ஏனெனில், தாமரை போன்ற கண்கள் என்றால் அங்கு உருவமிருக்கிறது என்று அர்த்தம். அவள் நிர்குணமாக இருந்தாலும் நமக்காக சகுணமாகவும் வருகிறாள். உருவம் தாங்கி வருகிறாள் என்று இந்த நாமம் காண்பித்துக் கொடுக்கிறது.
பத்மராக சமப்ரபா – இந்த நாமமானது அம்பிகையின் மொத்த சரீரத்தினுடைய நிறத்தையும் குறிப்பிடுகின்றது. பத்மராகம் என்கிற ரத்னமானது சிவப்பாக இருக்கும். அப்படி சிவப்பான நிறத்தில்தான் அம்பிகையின் முழு உருவமும் இருக்கிறது. இந்த நாமமானது முழு உருவத்தில் அம்பாளை தியானம் பண்ணும்படியாக இருக்கிறது.
ஏனெனில், லலிதா சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகத்தில் ஸிந்தூராருண விக்ரஹாம்…. சிந்தூரம் போன்ற சிவந்த நிறத்தை உடையவள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சராசர ஜகந்நாத என்று ரூபத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட நிர்குணத்தில் தொடங்கி, சக்ர ராஜ நிகேதனா என்று ஸ்தானத்தை சொல்லி, பார்வதீ என்று அவதாரத்தைச் சொல்கிறது. இதற்கும் அடுத்து பத்ம நயனா என்று அவளுடைய கண்களை சொல்லி, கடைசியாக பத்மராக ஸமப்பிரபா என்று சகுணம் என்கிற உருவத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இதில் கடைசியாக பத்ம நயனா, பத்மராக சமப்பிரபா என்கிற நாமங்களை கொஞ்சம் பார்ப்போம்.
பத்மநயனா என்பதில் தாமரையை கண்களுக்கும், பத்மராக சமப் பிரபா என்பதில் பத்ம ராக என்கிற சிவப்பு ரத்தினத்தை நிறமாக உவமையாகச் சொல்கிறார்கள். இதில் தாமரையும் சிவந்ததுதான், பத்மராகமும் சிவந்ததுதான். இதில் ரத்தினம் என்றால் கடினமாக இருக்கும். ஆனால், இந்த கடினம் அம்பாளிடமில்லை. அந்த நிறம் மட்டுமே உள்ளது.
தாமரை போன்ற கண்கள் உடையவள். ஆனால், சூரியனை கண்டால் மட்டுமே தாமரை திறப்பதும் மூடுவதுமாக இருக்கும். ஆனால், அம்பாள் எப்போதுமே நம் போன்ற குழந்தைகளுக்காக அருட்கண்களை திறந்தேதான் வைத்திருக்கிறாள். இந்த நிறத்தை மட்டுமே உவமையாகக் கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்ததாக ரத்தினமாகவும், தாமரை என்கிற புஷ்பமாகவும், பார்வதி என்கிற மலையாகவும் இருக்கிறாள். இதில் தாமரை என்கிற புஷ்பத்தை பறித்து விட்டால் நகர்ந்து விடுகின்றது. ரத்தினம் சுடர் விடுகின்றது. ஆனால் மலை அப்படியே இருக்கிறது. இப்படி நகர்ந்தும், நகராமலும் இருப்பதால் முதல் நாமமான சராசர ஜகந்நாதாவிற்கு மீண்டும் சென்று விடலாம். மேலேயுள்ள அனைத்து நாமமாகவும் இருக்கிறாள்.
இதற்கான கோயிலைச் சொல்வதற்கு முன்பு மேலே சொன்ன அனைத்து நாமங்களும் அடையக் கூடிய இடமாக ஒரு நாமம் வருகிறது. அதுதான் சக்ர ராஜ நிகேதனா என்பதாகும். இந்த ஸ்லோகத்தின் இருதய ஸ்தான நாமமாக இதுவே வருகின்றது. ஏனெனில், மேலே சொன்ன எல்லா நாமங்களுக்கும் உரியவளான அம்பிகைஸ்ரீ சக்ர ராஜத்திற்குள் வாசம் செய்கிறாள்.
ஒரு ஜீவன் சாதாரணமாக கண்ணுக்கு தெரியக் கூடிய உலகத்தை பார்க்கிறான். உலகத்தின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது. அவளே தலைவியாக இருக்கிறாள். அவளே சகுண நிர்குண ரூபங்களினால் நிறைந்திருக்கிறாள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அவள் இறுதியில் சமநிலைக்கு வந்துவிடுகிறாள்.
அதனால்,இந்த நாமங்களுக்கு மாங்காடு காமாட்சியம்மன் கோயிலைச் சொல்லலாம்.
ஏன் சொல்ல வேண்டுமெனில், இங்கு அம்பாள் தபஸில் இருக்கிறாள். மாங்காடு காமாட்சி பூஜையிலும், நின்ற கோலத்தில் தனிச் சந்நதியில் மூலவராகவும் அருள்கிறாள். மாங்காடு காமாட்சி ஒற்றைக் கால் தவத்திலும் இருக்கிறாள். ஆனால், இதைத்தாண்டி இன்னொரு விஷயம் உண்டு. இங்கு மாங்காடு காமாட்சியின் முன்பு மூலவர் முன்பு அர்த்த மேரு சக்கரம் பிரதிஷ்டை ஆகியிருக்கும். இது மிகமிக அரியதான சக்கரப் பிரதிஷ்டை ஆகும்.
இந்த அர்த்த மேருவின் விசேஷம் என்னவெனில், முதலில் மூன்று ஆவரணங்கள் படிப்படியாக இருக்கும். அதற்கு மேலிருக்கின்ற ஆவரணங்கள் சமநிலையில் இருக்கும். இதற்குத்தான் அர்த்த மேரு என்று பெயர். சக்ரராஜ நிகேதனா என்கிற நாமத்தின் பிரகாரம் சமநிலையாக ஸ்ரீ சக்ரத்திற்கு மத்தியில் அம்பாள் இங்கு விளங்குகிறாள்.
எப்படி ஒரு உபாசகன் படிப்படியாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிறான். அதற்கு அடுத்து எப்படி சமநிலையை அடைகின்றான் என்று மேலேயுள்ள எல்லா நாமங்களின் மூலமும் பார்த்தோம். அதையே இங்கு காண்பிக்கக் கூடிய ஒரு இடமாக, தலமாக, கோயிலாக மாங்காடு காமாட்சியம்மன் கோயில் விளங்குகின்றது.
(சக்தி சுழலும்…)

Related Stories: