பண்ருட்டி, ஜூன் 13: பண்ருட்டி பேருந்து நிலையத்துக்குள் புகுந்து அரசு பேருந்து ஓட்டுநரை பெண்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி கிராமத்தில் இருந்து 12ம் எண் அரசு பேருந்து நேற்று முன்தினம் பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பழனிசாமி(49) ஓட்டி வந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிக்கும், ஓட்டுநருக்கும் இடையே பேருந்தில் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வாக்குவாதம் செய்த நிலையில், பின்னர் அந்த பேருந்தில் பயணம் செய்த பெண், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் இறங்கினார். பின்னர் அந்த பயணி, அங்கு நின்று கொண்டிருந்த உறவினர்களை அழைத்து கொண்டு பேருந்து நிலையத்துக்கு சென்று ஓட்டுநரிடம் நியாயத்தை கேட்க சென்றார். அப்போது அங்கு பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி வந்த ஓட்டுநரிடம் பெண்கள், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திட்டி தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக ஓட்டுநர் பழனிசாமி, பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரை பெண்கள் தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
