சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் மயங்கி விழுந்த பெண் யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி, கரளவாடி மற்றும் தமிழ்புரம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக ஒரு பெண் யானை ஊருக்குள் நுழைந்து விவசாய விளைநிலங்களில் நடமாடி வந்தது. யானை நடமாட்டத்தை கண்டு மலைகிராம மக்கள் அச்சமடைந்தனர். பகல் நேரத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கரளவாடி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்த ஜீரஹள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது விவசாய தோட்டத்தில் சோர்வடைந்த நிலையில் நடமாடிய காட்டு யானை திடீரென மயங்கி விழுந்தது. வனத்துறையினர் அருகே சென்று யானை மீது தண்ணீர் தெளித்தனர். யானை அசையாமல் படுத்திருப்பதை அறிந்த வனத்துறையினர் பரிசோதித்து பார்த்தபோது காட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்வயிடத்துக்கு வந்து யானை உடலை பார்வையிட்டு விசாரித்தனர். இறந்தது 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும், உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
