×

வாதநோய் விலக்கும் வடிவழகன்

கேசிங்கன்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், சோழ நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர் ஜெயசிம்மகுலகாலன். அந்த மன்னரின் பெயரைத் தாங்கி ஜெயம் சிம்மகுல காலநல்லூர் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர், நாளடைவில் ஜெயசிம்ம நல்லூர் என்றும் பின்னர் ஜெயசிம்மன் என்று மருவி அது தற்போது கேசிங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயம் கிழக்குத்திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத நுழைவாயிலைக் கடந்ததும், வெளிப்பிராகாரத்தில் நந்தியையும் பலிபீடத்தையும் தரிசிக்கலாம். அதை அடுத்து உள்ள அலங்கார மண்டபத்தைக் கடந்ததும், வரும் மகாமண்டபத்தில், அர்த்த மண்டபத்திற்குச் செல்லும் வாயிலின் வலதுபுறம் சனிபகவானுக்கு தனி மண்டபம் உள்ளது.

மண்டபத்தின் வலதுபுறம், இறைவி சௌந்திரநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் உள்ள கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அழகு வடிவினன் என்பதால், இவர் சுந்தரேஸ்வரர். மகாமண்டபத்தின் கீழ் திசையில் பைரவர், சூரியன், நாகர் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. இறைவனின் கருவறை தேவக்கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, மேல்புறம் மகாவிஷ்ணு, வடபுறம் துர்க்காதேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தின் தென் திசையில் நால்வர். மேற்கில் பிள்ளையார், சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி. வடக்கில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் சிறிய உருவமுடைய பிள்ளையாரை, சின்ன பிள்ளையார் என பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். தினசரி நான்கு கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், புத்தாண்டு பிறப்பு, கார்த்திகை, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஐப்பசி மாத பௌர்ணமி அன்று இங்கு இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தில் நவகிரகங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாமண்டபத்தில் தனி சந்நதியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு சனிக் கிழமைகளிலும், கிரகப்பெயர்ச்சி நாட்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிகிரக பாதிப்பு உள்ளவர்கள், இந்த சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதால், சனிதோஷ பாதிப்பின் வீரியம் கணிசமாக குறையும் என்பது பக்தர்களின் நிறைவான நம்பிக்கை.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருப்பனந்தாள் – மணல்மேடு பேருந்து தடத்தில் கடலங்குடியிலிருந்து தெற்கில் 3கி.மீ., தொலைவில் உள்ளது கேசிங்கன்.

Tags : Vadizhagan ,Kesingan ,Kulothungan III ,Chola ,Jayasimhakulakalan ,Jayam Simhakula Kalanallur ,Jayasimhakula Nallur… ,
× RELATED செவ்வாய் சனி சேர்க்கை தோஷ பரிகாரங்கள்