×

எட்டாம் பாவம் கெட்ட பாவமா? நல்ல பாவமா?

ஜோதிட சாஸ்திரத்தில் எதுவுமே முழுமையான கெட்ட பாவங்கள் அல்ல. எதுவுமே முழுமையாக நல்ல பாவங்களும் அல்ல. எப்படி ஒரு மனிதன் முழுமையாக நல்லவனாக இருக்க முடியாதோ, அதைப்போல ஒரு முழுமையான கெட்டவனும் இருக்க முடியாது. நல்லவன் இடத்திலும் பல வேண்டாத குணங்கள் இருக்கும். கெட்டவன் இடத்திலும் விரும்பத்தக்க நல்ல குணங்கள் இருக்கும். இதை அப்படியே பிரதிபலிப்பதுதான் மனிதர்களின் ஜாதகங்களும். அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வதைவிட இந்த கட்டங்கள், என்ன தத்துவத்தை நம்முடைய வாழ்வியலுக்குச் சொல்லுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பக்குவம் வந்துவிட்டால், நம்முடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே வராது.
அதைவிட நம்முடைய வாழ்க்கையை நாமே புரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் வாழ்வதும், நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்வதும் எளிது.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 12 பாவங்களும், 9 கிரகங்களும் மனித வாழ்க்கையின் சமநிலையை உருவாக்கவே படைக்கப்பட்டன. இதை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
பொதுவாக 1, 5, 9 ஆகிய திரிகோண பாவங்களையும், 4, 7, 10 ஆகிய கேந்திர பாவங்களையும் நாம் “மிகச் சிறந்த பாவங்கள்’’ என்கிறோம். ஆனால், இவற்றுள்ளும் வேண்டாத குணங்கள் மறைந்துள்ளன.
1-ஆம் பாவம் லக்னம் – சுய சிந்தனை. இது ஒரு மனிதனின் ஆரோக்கியம், குணத்தைக் குறிக்கும் நல்ல பாவம். ஆனால், இது அளவுக்கு அதிகமாக வலுப்பெற்றால், மனிதனுக்கு தலைக்கனம், சுயநலம், நான் என்ற அகந்தை வந்துவிடும்.
5-ஆம் பாவம், பூர்வ புண்ணியம், அறிவு. மிக நல்ல பாவம். ஆனால், அளவுக்கு மீறினால் மனிதன் உழைக்காமல் எல்லாம் என் புத்தி சாலித்தனத்தால் நடக்கும் என்ற சூதாட்ட மனநிலைக்கு தள்ளப் படுவான்.
6-ஆம் பாவத்திற்கு 12-ஆம் பாவமாக அமைத்துவிடுவதால், வேலை செய்யாமல் ஜாலியாக சுற்றுபவர்களுக்கு ஐந்தாம் பாவம் வலுத்திருக்கும்.
9-ஆம் பாவம், பாக்கிய ஸ்தானம், ஆனால், 9-ஆம் பாவம் மட்டுமே வலுத்து, மற்ற பாவங்கள் கெட்டால், அந்த மனிதன் உலகியல் வாழ்க்கைக்கு லாயக்கற்றவனாக, எதற்கும் உழைக்காமல் எல்லாம் விதிப்படி நடக்கும் என்று சோம்பேறியாக உட்கார்ந்து விடுவான். காரணம் அது ஜீவனம், தொழிலுக்கு 12ம் பாவம். இப்போது 6, 8, 12 ஆகிய பாவங்களை எடுத்துக்கொள்வோம்.
“துர்ஸ்தானங்கள்’’ அல்லது கெட்ட பாவங்கள் என்கிறோம். ஆனால், இவற்றுள் இருக்கும் அற்புதமான நல்ல குணங்கள், இருக்கின்றன. 6-ஆம் பாவம் நோய், கடன், எதிரி. இந்த பாவம் இல்லை என்றால், மனிதனுக்கு “போராடும் குணமே’’ வராது. ஒரு சவாலை எதிர்கொள்ளும் துணிச்சல், நோய் எதிர்ப்புச் சக்தி, போட்டிகளில் வெல்லும் வேகம் எல்லாமே இந்த 6-ஆம் பாவம் தருவதுதான். 8-ஆம் பாவம் ஆயுள், விபத்து, அவமானம். இது மனிதனுக்கு ஆழ்ந்த ஞானம், பொறுமை, மற்றும் ஆன்மிகத் தேடலைத் தரும். உலகத்திலேயே மிகப்பெரிய விஞ்ஞானிகள், மற்றும் ஜோதிடர்கள் உருவாவது இந்த 8-ஆம் பாவத்தின் பலத்தால்தான்.
ஒரு அவமானம் வராமல் மனிதன் பக்குவப்படுவதே இல்லை. 12-ஆம் பாவம் விரயம், நஷ்டம். இது செலவைக் குறிக்கும் பாவம் என்றாலும், இதுவே “மோட்ச ஸ்தானம்’’.
பேராசைகளைத் துறந்து, தான தர்மங்கள் செய்து, நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது இந்த 12-ஆம் பாவத்தின் சுபத்துவத்தால்தான். பாவங்கள் மட்டுமல்ல, கிரகங்களும் இப்படித்தான். குரு சுபகிரகம். அளவுக்கு அதிகமாக குருவின் பார்வை இருந்தால், மனிதன் “அதி நல்லவனாக’’ இருந்து ஏமாந்து போவான். சனி/ செவ்வாய் அசுப கிரகங்கள்.
இவர்கள்தான் ஒரு மனிதனுக்குக் “கடின உழைப்பு, சட்டம் – ஒழுங்கு மற்றும் தைரியத்தை’’ கொடுக்கிறார்கள்.
இவர்கள் இல்லை என்றால், மனித சமுதாயத்தில் உழைப்பும் இருக்காது, பாதுகாப்பும் இருக்காது. இருள் இருந்தால்தான் ஒளியின் மதிப்பு தெரியும். தீமை இருந்தால்தான் நன்மையின் வீரியம் புரியும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் இந்த “இருமை’’ தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கிறது. ஜோதிடத்தை வெறும் கணிதமாகப் பார்க்காமல், மனித மனதின் உளவியலோடும் வாழ்வியல் தத்துவத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எந்த ஒரு பாவமும், அதனை வளர்க்கின்ற பாவத்தோடும், எதிர்க்கின்ற பாவத்தோடும் இணைந்தே செயலாற்றும். எனவே, ஒரு பாவத்தின் காரகத்தைப் பார்க்கின்ற பொழுதும், அதனைக் கட்டுப்படுத்தும் பாவத்தின் தன்மையையும், அதனை விருத்தி செய்யும் பாவத்தின் தன்மையையும் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்.
இப்பொழுது, நான் எட்டாம் பாவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எட்டாம் பாவம் சுபபலனை தருமா அல்லது அசுப பலன்களைத் தருமா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு பாவத்தை அதனுடைய மூன்றாம் பாவம் விருத்தி செய்யும். அந்த அடிப்படையில், ஆறாம் பாவ விருத்தி, எட்டாம் பாவத்தில் வெளிப்படும். ஆறாம் பாவம் வேலை, நோய், என்றால் அதன் கடுமையை எட்டாம் பாவம் காட்டும். இது அசுப பலன். ஆறாம் பாவம் வேலை, வெற்றி என்றால் அதில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருவது எட்டாம் பாவம். இதனைப் புரிந்து கொள்ள சில எளிய உதாரணங்களைப் பார்ப்போம். ஆறாம் பாவம் என்பது தினசரி வேலை, உத்தியோகம் மற்றும் போட்டிகளைக் குறிக்கும். எட்டாம் பாவம் என்பது எதிர்பாராத தனவரவு, இன்சூரன்ஸ், உயில் சொத்து, மற்றும் திடீர் திருப்பங்களையும் குறிக்கும். ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் சாதாரண மேலாளராக (6-ம் பாவம் – வேலை) போராடி வேலை செய்து கொண்டிருக்கிறார். திடீரென்று அந்த நிறுவனத்தின் வெளிநாட்டுப் பங்குதாரர் விலகுகிறார் அல்லது நிறுவனத்தில் ஒரு பெரிய மாற்றம் நடக்கிறது.
யாரும் எதிர்பாராத விதமாக, இவருக்குப் பெரிய பதவி உயர்வும், நிறுவனத்தின் பங்குகளும் கைமாறுகின்றன. இங்கே நாம் அசுபம் என்று நினைத்த 6, 8ம் பாவங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும். 6-ம் பாவம் தந்த வேலையை, 8-ம் பாவம் “திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பெரிய உயர்வு’’ ஆக மாற்றிக் கொடுக்கிறது.
ஒரு மாணவர் அரசு வேலைக்கான கடினமான போட்டித் தேர்வை எழுதுகிறார். கட்-ஆஃப் மதிப்பெண் மிக அதிகமாக இருப்பதால், அவருக்கு வேலை கிடைக்காது என்று அனைவரும் நினைக்கிறார்கள் (6-ம் பாவ போராட்டம்). ஆனால், கடைசி நேரத்தில் அரசு புதிய பணியிடங்களை அறிவிக்கிறது அல்லது நீதிமன்ற உத்தரவால் இடஒதுக்கீடு மாறி, இவருக்கு எதிர்பாராத விதமாக மாநில அளவிலான நல்ல வேலை கிடைக்கிறது.
6-ன் வீரியத்தை, 8-ம் பாவம் ஒரு “திடீர் ஜாக்பாட்’’ போல மாற்றி வெற்றியைத் தேடித்தருகிறது. இங்கே 6-ன் சுபத்துவத்தை 8-ம் பாவம் பிரம்மாண்டமான அதிர்ஷ்டமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சில நுட்பங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

Tags :
× RELATED கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?