×

மனைவி மூலம் வருமானமா? எதிர்பாராத சொத்தா? தீராத பிரச்னையா? எட்டாம் பாவம் பார்!

ஜாதகத்தில் 4, 8, 12 – மூன்றும் மோட்ச திரிகோணங்கள் என்பார்கள். உதாரணமாக எட்டாம் பாவம் இயங்கும் பொழுது அதன் பாக்கியஸ்தனமான நான்காம் பாவமும், பன்னிரண்டாம் பாவமும் இயங்கும். எட்டாம் இடம் என்றால் கஷ்டம் என்று நினைக்கிறோம் அல்லவா. கஷ்டம் வரும்போது சுகம் குறையும். சுகம் நான்காம் இடம். தூக்கம் குறையும். தூக்கம் 12-ஆம் இடம். ஆக, எட்டாம் இடத்தோடு இந்த 4ம், 12ம் தொடர்பு கொள்ளும். ஆயினும் எட்டாம் இடத்தில் கஷ்டம் மட்டுமா இருக்கிறது? அதில் எத்தனையோ நன்மைகள் இருக்கின்றன. மறைவு ஸ்தானம் என்று சொல்வதால், உளவுத்துறை உத்தியோகம், மறைந்த நோயை தீர்க்கும் மருத்துவராகும் யோகம், தத்துவ ஆராய்ச்சி முதலிய பல விஷயங்களை எட்டாம் பாவம் எடுத்துரைக்கும்.
கால புருஷனுக்கு ஒன்றாம் இடமாகிய மேஷத்திற்கும், எட்டாம் இடமாகிய விருச்சிகத்திற்கும் ஒரே கிரகத்தை (செவ்வாய்) வைத்தார்கள். ஒன்று என்பது நீங்கள். எட்டு என்பது உங்களுடைய துன்பம். வருகின்ற துன்பங்களில் பெரும்பாலான துன்பம் உங்களால்தான் வருகின்றன. எனவே நீங்கள் சரியாக இருந்தால் உங்களுடைய எட்டாம் பாவமாகிய துன்பங்கள் கட்டுக்குள் இருக்கும்.
எட்டாம் பாவமாகிய துன்பங்கள் கட்டுக்குள் இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரும்பாலான துன்பங்கள் உங்கள் உணர்ச்சிகளால்தான் வருகின்றன. உணர்ச்சிக்கும் வேகத்திற்கும் உரிய கிரகமான செவ்வாய்க் கிரகத்தை ஒன்றுக்கும் எட்டுக்கும் அதிபதியாக வைத்தார்கள். பன்னிரண்டாம் இடம் என்பது ஞானத்தைத் தருகின்ற இடம். எட்டாம் இடத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்கள், உங்களுக்கு பன்னிரண்டாம் இடத்தின் பலனாகிய ஞானத்தைத் தரும். நாளைக்கு என்ன நடக்கும்? நாளைய மறுநாள் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, சுவாரஸ்யம் இல்லாமல் வாழ்வதைவிட, நடப்பது நடக்கட்டும் அதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையைத் தருவது எட்டாம் பாவம்.
நமக்கு எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கும். சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையையே முற்றிலும் மாற்றி அமைத்துவிடும். அப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்வதுதான் எட்டாம் பாவம். இல்லறத்திலே ஈடுபட்டிருந்த ஒருவன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திடீரென்று ஒரே நாளில் துறவறத்தைத் தேர்ந்தெடுத்துவிடுவான். அந்தத் திடீர் திருப்பத்தைத் தருவது எட்டாம் பாவம். மிகச் சாதாரணமாக இருந்த ஒருவர், திடீரென்று அரசியலிலோ தொழிலிலோ புகுந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவதற்கு காரணமாக எட்டாம் பாவம் இருக்கிறது. அறக்கட்டளையை ஆரம்பித்த சிலருக்கு நன்கொடைகள் வந்து கொட்ட ஆரம்பிக்கும். அதற்கும் எட்டாம் பாவ சுபவலிமைதான் காரணம்.
உயில் மூலம் கிடைக்கக்கூடிய சொத்து, இன்ஷூரன்ஸ் மூலமாக கிடைக்கக் கூடிய பணம் எட்டாம் பாவம் தீர்மானிக்கிறது. மனைவி மூலம் வருகின்ற சொத்து, எட்டாம் பாவம் தீர்மானிக்கிறது. காரணம், வேறு ஒன்றும் இல்லை; மனைவியாகிய ஏழாம் பாவத்தின் இரண்டாம் பாவமாக எட்டாம் பாவம் அமைகிறது. அதே நேரத்தில், இந்த பாவம் ஆயுள் பாவம் என்பதை மறந்துவிடக்கூடாது. என்னுடைய நண்பர் ஒருமுறை ஒரு கேள்வி கேட்டார்.
“ஒருவனுடைய துன்பங்கள் எட்டாம் பாவம் என்று சொல்கிறீர்கள். அந்த எட்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?’’ நான் சொன்னேன்.
“இதில் என்ன முரண்பாடு இருக்கிறது! ஒருவன் நீண்ட காலம் கஷ்டம் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், ஆயுள் அதிகமாகத் தானே இருந்தாக வேண்டும்’’
நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு பாவம் சுட்டிக் காட்டுகிறது. அதில் மர்ம உறுப்புக்களை, (பாலின உறுப்புக்களை) எட்டாம் பாவம் சுட்டிக்காட்டும். வலி, வேதனை, துன்பம், துரோகம், போராட்டம், விபத்து, உடல் உறுப்புக்கள் சீர் கெடுதல், அறுவை சிகிச்சை, பொருள்கள் இழத்தல், திருடப்படுதல் முதலிய அனைத்தையும் எட்டாம் பாவம் சுட்டிக்காட்டும். எட்டாம் பாவம் வலிமை அடைந்து, ஒன்பதாம் பாவம் வலிமை இழந்து விட்டால், நிச்சயமாக அவர் இறைச் சிந்தனை தர்மம் முதலிய விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவராக இருப்பார். ஐந்தாம் பாவம் எட்டாம் பாவத்தோடு தொடர்புகொண்டாலே, பூர்வ புண்ணியம் இழக்கிறார், குறைபாடு இருக்கிறது.
அதைப்போல, ஒன்பதாம் பாவம் எட்டாம் பாவம் இணைகின்ற பொழுது பூர்வீகப் பிரச்னைகள், குலதெய்வத்தின் அருள் இல்லாமல் போவதைத் தெரிந்து கொள்ளலாம். எத்தனை முயற்சி செய்தும், முயற்சி பலிக்காமல் இருப்பதற்கும், எத்தனைத் திறமை இருந்தும் திறமை முன்னேற்றத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கும் தடைவிதிப்பது. எட்டாம் பாவம்.
இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய பிராரப்த கர்மங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் அனுபவிக்க வைப்பது எட்டாம் பாவம். ஒன்பதாம் பாவத்துக்கு பன்னிரண்டாம் பாவமாக எட்டாம் பாவம் வருவதால், எட்டாம் பாவத்தின் பிரச்னைகளை, நாம் அவ்வளவு எளிதாக பிராயச்சித்தம் பூஜைகள் முதலியவற்றைச் செய்து குறைக்க முடியாது.
ஆறாம் பாவம் பகை என்றால், அதன் நீட்சி அதாவது தீராப்பகை எட்டாம் பாவம்.
ஆறாம் பாவம் சாதாரண நோய் என்றால், அது தீராத நோயாக (chronic) மாறுவது எட்டாம் பாவத்தில் இருக்கிறது.
ஆறாம் பாவம் உழைப்பு. எட்டாம் பாவம் மிகக் கடுமையான உழைப்பு.
சட்ட விரோதமான செயல்கள், மறைமுகமாக கிடைக்கக்கூடிய லஞ்சம், போன்றவற்றையும் எட்டாம் பாவம் சுட்டிக்காட்டும். எட்டாம் பாவம் வலுத்துவிட்டால் அது ஒன்பதாம் பாவமாகிய தந்தையின் காரகத்திற்கு விரயம் ஆகும். எனவே பெரும்பாலும் சிறுவயதிலேயே தந்தை பிரிந்து போய்விடுவார். தந்தையின் ஜாதகம் வலுவற்று இருந்தாலோ அல்லது இதே ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியும் மற்றும் சூரியனும் வலுவில்லாமல் இருந்து தசா புத்திகள் நடந்தாலோ, தந்தையின் மரணத்திற்கும் எட்டாம் பாவம் காரணமாகிவிடும்.
என்னுடைய ஜாதகம் கும்ப லக்கனம். எட்டாம் வீடு புதன் வீடு. அந்த புதன் தந்தையாகிய ஒன்பதாம் வீட்டுக்கு பன்னிரண்டாம் வீட்டுக்கு உரியவன். துலா லக்னமாகிய ஒன்பதாம் வீட்டுக்கு பாதகாதிபதியாக தந்தையின் காரகத்துவம் வகிக்கும் சூரியன் விளங்குகிறார்.
சூரியனின் நட்சத்திரமாகிய உத்திராடத்தில், ஒன்பதாம் இடத்திற்கு எட்டாம் இடமாகிய ஆயுள் ஸ்தான அதிபதி சுக்கிரன் இருக்கிறார். ஒன்பதாம் இடத்திற்கு 3, 6க்கு உரிய அதாவது நோய் ஸ்தானத்திற்கும் மாரகஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய குருவின் நட்சத்திரத்தில் ஆறாம் இடத்தில் அதாவது ஒன்பதாமிடத்திற்கு ஆறாம் இடமாகிய மீனத்தில் கேது அமர்ந்திருக்கிறார். புதன்தசை, கேதுபுக்தி நடந்தபோது என்னுடைய தந்தை காலமானார்.
இப்படி ஒன்றை மற்றொரு பாவத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது, ஜாதகத்தின் பல ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

Tags : Moksha Trikonas ,
× RELATED கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?