×

செவ்வாய் சனி சேர்க்கை தோஷ பரிகாரங்கள்

நவகிரகங்களில் சகோதரகாரகன், பூமிகாரகன் என்று குறிப்பிடக்கூடிய செவ்வாய் பகவான், வீரர்கள் சேவகர்கள், தளபதி, தீ, செம்பு, தெற்குதிசை, ஆயுதங்கள், நிலம், வீடு, துவரை, போர், கலகம், வன்முறை, ரண நோய், ரண சிகிச்சை, விபத்து, கடன், செம்பவளம், சிவப்பு நிறம், சகோதரர்கள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் உடையவர். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என்று குறிப்பிடக்கூடிய சனிபகவான், பணியாளர்கள், முதியவர், மேற்கு திசை, எண்ணெய் இரும்பு, கருப்பு நிறம், கந்தல் துணி, மாற்றுத் திறனாளி, கடன், விபத்து, ஆயுள் முதலியவற்றிற்கு காரகத்துவம் உடையவராவார்.
செவ்வாய் – சனி ஆகிய இரு கிரகங்களும் இயற்கை பாவ கிரகங்களாகும் தவிர பகை கிரகங்களாகும் ஒரு ஜனன ஜாதகத்திலோ அல்லது கோட்சாரத்திலோ செவ்வாய் சனி சேர்க்கை என்பது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கால புருஷ தத்துவப்படி, ஆயுள்ஸ்தான அதிபதி செவ்வாயும், ஆயுள்காரகர் சனியும், ஜனன ஜாதகத்திலோ கோட்சாரத்திலோ சேர்ந்து இருப்பது நல்லதல்ல. ஒரு ஜனன ஜாதகத்தில், பன்னிரு பாவங்களில் எந்த பாவகத்திலும் போர் கிரகமான செவ்வாயும் மந்த கிரகமான சனியும் இருந்தாலும், அந்த பாவகம் பாதிக்கப்படும் இவர்கள் இருவரும் ஒரு சேர ஒரு பாவகத்தை பார்த்தாலும், அந்த பாவகமும் மிகவும் பாதிப்படையும் என்பது நிரூபணமான உண்மையாகும். இனி எந்த ஜனன ஜாதகத்தில் எந்தெந்த பாவகங்களில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
லக்ன பாவகம்
லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், தேவையில்லாத குழப்பம், மன உளைச்சல் ஏற்படும். ஜாதகரின் உடல்நலம் பாதிக்கப்படும். கௌரவம் பாதிக்கப்படும். செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்காது.
இரண்டாவது பாவகம்
குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில், செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்கும். வாக்கு கடுமையாக இருக்கும். முன்கோபம் ஏற்படும். பண வரவை தடை செய்யும். மறுத்துப் பேசுதல், எதிர் வாதம் செய்தல் போன்றவற்றை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஆரம்பக் கல்வியில் தடை ஏற்படும்.
மூன்றாம் பாவகம்
லக்னத்திற்கு மூன்றாம் பாவகமான இளைய சகோதரர் ஸ்தானத்தில் இச்சேர்க்கை இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். காரியத்தடை ஏற்படும். புகழ், கௌரவம் பாதிக்கப்படும்.
நான்காம் பாவகம்
மாத்ரு ஸ்தானமான நான்காம் பாவகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். கல்வி தடைபடும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். ஜாதகரின் தேகம் பாதிப்படையும். பிரயாண சமயங்களில், கவனமும் நிதானமும் மிகவும் அவசியமாகும்.
ஐந்தாம் பாவகம்
பூர்வ ஜென்ம புண்ணியம், புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். பூர்வ ஜென்ம குறைபாடுகள் உண்டாகும். புத்திரதோஷம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் விவகாரங்கள் ஏற்படும்.
ஆறாம் பாவகம்
லக்னத்திற்கு ஆறாம் பாவகமான ருணரோக சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், தேவையில்லாத கடன் பிரச்னைகள் ஏற்படும். நோய் பிரச்னை உண்டாகும். சிலருக்கு அறுவை சிகிச்சை வரை செல்லும். தாய்மாமனுக்கு சிறப்பில்லை. எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படும். ஆயுதங்களால் காயம் உண்டாகும். பொதுவாக, 6 ஆம் பாவகத்தில் இயற்கை பாவ கிரகங்கள் இருப்பது நன்றுதான். எனினும் இக்கிரகச் சேர்க்கையானது நல்லதல்ல.
ஏழாம் பாவகம்
களத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தில், செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், களத்திர தோஷம் உண்டாகும். திருமணத் தடை ஏற்படும். திருமணம் நடந்தாலும், ஒற்றுமை குறைவு ஏற்படும். கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கும். கூட்டு தொழிலில் பிரச்னை ஏற்படும்.
எட்டாம் பாவகம்
லக்னத்திற்கு எட்டாம் பாவகமான, ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் சனி சேர்க்கையானது, அவமானம், நீங்காபகை ஆகியவற்றை ஏற்படுத்தும். வீண் அலைச்சல் உண்டாகும். நீதிமன்ற வழக்குகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
ஒன்பதாம் பாவகம்
லக்னத்திற்கு ஒன்பதாம் பாவகமான பாக்கியஸ்தானத்தில் இக்கிரகச் சேர்க்கை இருந்தால், தந்தை மகன் உறவு சுமுகமாக இருக்காது. தந்தையின் சொத்தை அனுபவிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை.
பத்தாம் பாவகம்
லக்னத்திற்கு பத்தாம் பாவகமான தொழில் ஸ்தானம் எனப்படும் கர்ம ஸ்தானத்தில், செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், செய்யும் தொழில் நிரந்தரமாக அமையாது. தொழிலில் போட்டி கடுமையாக இருக்கும். உத்தியோகம் என்றால் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது.
பதினோராம் பாவகம்
லக்னத்திற்கு பதினோராம் பாவகமான லாபஸ்தானம் எனும் மூத்த சகோதர ஸ்தானத்தில், செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால், மூத்த சகோதரருக்கு பிரச்னை உண்டாகும். வெளிநாட்டு முயற்சி பாதிப்பை ஏற்படுத்தும். தெளிவான சிந்தனை ஏற்படாது. எண்ணிய எண்ணம் நிறைவேறாது.
பன்னிரண்டாம் பாவகம்
லக்னத்திற்கு பன்னிரண்டாம் பாவகமான விரய ஸ்தானம் எனும் அயன சயன போக ஸ்தானத்தில், இக்கிரக சேர்க்கை இருந்தால், நிம்மதியான தூக்கம் ஏற்படாது. பஞ்சணை தோஷம் உண்டு. வெளிநாடு தொழில் அமைவதில் தடை ஏற்படும். அசுப விரயங்கள் மூலம் பண இழப்பு உண்டாகும். வம்பு வழக்கு வந்த வண்ணம் இருக்கும்.
கோட்சாரத்தில் சனி செவ்வாய் சேர்க்கை
கோச்சாரத்தில் பொதுவாக சனி செவ்வாய் சேர்ந்து இருப்பது இயற்கை பேரழிவுகளை கொண்டு வரும். நிலநடுக்கம், விமான விபத்துக்கள், வாகன விபத்துக்கள், நாடுகளுக் கிடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல், பெரும் தீ விபத்துகள் போன்றவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும். சண்டை சச்சரவு ஏற்படும். இக்காலகட்டத்தில், மனிதர்கள் மிகுந்த பொறுமையாக இருப்பது நல்லது. தெய்வ பக்தி மிகவும் அவசியம். செவ்வாய், பகவானுக்கும் சனீஸ்வர பகவானுக்கும் பூஜை வழிபாடுகள் செய்வது உத்தமம்.
மிக உன்னதமான பரிகாரம்
சிவன் கோயிலில் காணப்படும் சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில், 2 இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால் செவ்வாய் சனி சேர்க்கை தோஷ பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

Tags : Mars ,Saturn ,earth ,
× RELATED கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?