×

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி முடங்கும் அபாயம்: விவசாயிகள் கவலை

 

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி செய்யமுடியாதநிலை உருவாகி உள்ளது. நீர்மட்டம் 80 அடிக்குகீழ் இருப்பதால் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பாசனம் மூலம் ‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல், ஜனவரி 28ம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்து, நீர்வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இருந்தால், பருவமழையை எதிர் நோக்கி குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நாளான இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர்இருப்பு 41.52 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 540 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் அணையில், குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடிக்குஇன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் விவசாய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கினாலும், கர்நாடக மாநில அணைகள் நிரம்பிய பிறகே உரி நீர் திறக்கப்படும். கர்நாடகா முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி போன்ற அணைகளின் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது 3ல் ஒரு பங்கு நீர் இருப்பு தான் உள்ளது. பருவமழை தீவிரமடைந்து அங்குள்ள அணைகள் நிரம்பி மேட்டூருக்கு உபரி நீர்வர தற்போதைய நிலையில் சாத்தியமில்லை.

இவற்றை கணக்கிட்டு நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், மேட்டூர் அணையின் வரலாற்றில் 61வது ஆண்டாக, குறுவை சாகுபடிக்கு குறித்த நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட குறைவாகவே பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறிதான். இதனால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல்சாகுபடி ஒட்டுமொத்தமாக சரியும் அபாயம் உள்ளது. இருப்பினும் கிணற்று நீர் பாசனத்தை கொண்டு சில விவசாயிகள் நெல்சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

அரிசி விலை உயர வாய்ப்பு
தமிழகத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் காவிரி டெல்டா பகுதியின் பங்கு சுமார் 34% (மூன்றில் ஒரு பங்கு) ஆகும். ஆனால் இந்த ஆண்டு நெல்சாகுபடி பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டின் இறுதியில் அரிசி விலை உயரும் அபாயம் உள்ளது. மேலும் தமிழகத்தின் அரிசி தேவைக்கு வெளிமாநிலங்களை நம்பிதான் இருக்கவேண்டிய நிலை உருவாகும்.

ஒருபோக சாகுபடியாவது?
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி பாசனத்தின் மூலம் குறுவை,சம்பா, தாளடி என மூன்றுபோகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடி ஜூனில் தொடங்கி செப்டம்பரில் முடிக்கப்படும். குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடி 36, ஏடிடி 43, ஏடிடி 45 மற்றும் சிஓ 51 ஆகியவை இப்பருவத்தில் பயிரிடப்படுகின்றன இதைத்தொடர்ந்து சம்பா சாகுபடி செப்டம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரிவரை நடக்கும். 30 முதல் 150 நாட்கள் வரை நீடிக்கும் நடுத்தர மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் இப்பருவத்தில் பயிரிடப்படுகின்றன. இவை தவிர வடகிழக்கு பருவமழையை நம்பி தாளடி சாகுபடியும் நடக்கிறது. ஆனால் இந்தமுறை மேட்டூர் அணையின் நீர்மட்டம் பரிதாபகரமான நிலையில் இருப்பதால் குறுவை, சம்பா சாகுபடி நடப்பது சந்தேகம்தான். மேட்டூர் நீரை நம்பி உள்ள விவசாயிகளுக்கு ஒரு போக சாகுபடியாவது இந்த முறை செய்யமுடியுமா என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

குறுவை சிறப்பு தொகுப்பு
விவசாயிகள் கோரிக்கை
கடந்த 2024ம் ஆண்டுதிமுக ஆட்சியின் போது மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 28ம்தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை பாதுகாக்க அரசு ரூ.79 கோடி ஒதுக்கி குறுவை சிறப்பு தொகுப்பை அறிவித்தது. ஆனால் தற்போதைய தவெக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. திமுக அரசு போல் தவெக அரசு விவசாயிகளை காப்பாற்ற நிதி ஒதுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூப்பர் எல் நினோ வின் தாக்கத்தினால், மேட்டூர் அணை இந்தாண்டு நிரம்புமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இயல்பைவிட குறைவாக பதிவாகும், மழை பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை திறக்க 60 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தால் தாரளமாக அச்சமின்றி அணையை திறந்திருக்கலாம், அதற்கு மேலும் 20 டி.எம்.சி நீர் தேவை. தமிழ்நாடு அரசு குறைந்தது 150 டிஎம்சி நீரை கர்நாடகாவிடமிருந்து கேட்டு பெற வேண்டும். அப்போது தான் அடுத்த ஆண்டு கோடையில் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்கள் குடிநீர் பிரச்னை இல்லாமல் சமாளிக்க முடியும்.

Tags : Kuruvai ,delta ,Mettur dam ,Mettur ,Cauvery delta ,Cauvery… ,
× RELATED மன்னார்குடி அருகே குடிருப்பு பகுதியில் தீ விபத்து