திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதமடைந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு படைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். தீ அதிகமாக பரவியதால் வீட்டில் இருந்த மரக்கட்டில்கள், மின்சாதன பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதமடைந்தது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
