திமுக கள ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழுவை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 59 இடங்களில் வெற்றி பெற்றது. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

இந்த 38 பேரும் 19 அணிகளாக தொகுதி வாரியாக சென்று மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிக்கு உட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேசினர். மேலும் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களையும் தனித்தனியே சந்தித்து பேசி கருத்துகளையும் பெற்றனர். இந்த குழுவிடம் தேர்தல் முடிவு தொடர்பாக மனம் விட்டு பேசியுள்ளனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தையும் தெரிவித்தனர்.

இதனை அறிக்கையாக தயாரித்து தேர்தல் கள ஆய்வு குழு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் அளித்தது. அவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கள ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த எம்பி கான்ஸ்டைன் ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி மற்றும் மருது கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கள ஆய்வு அறிக்கையை அளித்தனர்.

அவர்களிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கள ஆய்வு குழுவினர் நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகளிடம் பேசிய கருத்துகளை அவரிடம் தெரிவித்தனர். இதனை மு.க.ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார். கள ஆய்வு குழு அறிக்கை அளித்துள்ளதை தொடர்ந்து திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாவட்ட செயலாளர்களுக்கு குறைந்த பட்சம் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: