கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 90 நாட்களுக்கு பின் நேற்று சிபிஐ விசாரணை துவங்கியுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 5 பேர் நேரில் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் இரவோடு இரவாக சென்னை சென்று விட்டார். ஒரு மாதம் கழித்தே பாதிக்கப்பட்டவர்களை சென்னை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறினார்.
இந்த வழக்கை ஆரம்பத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. அதேபோல் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ கைக்கு வழக்கு மாறியது. கடந்த அக்டோபரில் சிபிஐ விசாரணையை துவக்கியது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் உள்ளூர் மக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வியாபாரிகள் ஆகியோரை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
தற்போது அமைச்சர்களாக உள்ள ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோரையும் அழைத்து விசாரித்தனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 15, 18, 19 ஆகிய 3 நாள் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல் கடந்த மார்ச் 17ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர், மார்ச் மாதம் முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில் சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையில் 10 அதிகாரிகள் நேற்று கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்து மீண்டும் விசாரணையை துவங்கினர்.
இதில் சம்மனோடு வாங்கல் இன்ஸ்பெக்டர் சையது அலாவுதீன், டவுன் எஸ்ஐ ரமேஷ் மற்றும் 3 போலீசார் என 5 பேர் சிபிஐ முன் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விசாரணை நடந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
90 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணையை துவங்கியுள்ளனர். டெல்லியில் முதல்வர் விஜய் இருக்கும் நிலையில் கரூரில் 41 பேர் பலி வழக்கு விசாரணையை சிபிஐ துவக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் திரும்பவும் சம்மன் அனுப்பி விசாரணை செய்யவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
