சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. நீர்பிடிப்புப் பகுதியில் போதிய மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 424 கன அடியாகவும் நீர்மட்டம் 79 அடியாகவும் உள்ளதால் நாளை திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த திமுக ஆட்சியில் ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்தது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடைந்து சாகுபடியை அதிகரித்தனர்.
இந்த நிலையில், தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மேட்டூர் அணை நாளை திறக்கப்படாது என அறிவித்துள்ளது. நீர்வளத்துறையின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் திறக்கவில்லை என்றல் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்படும் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 வரை செலவு செய்தும் நெற்பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மோட்டார் பழுதடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாற்றியுள்ளனர். தவெக ஆட்சியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் குறைந்த மின் அழுத்தம் மின் விநியோகம் காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாத நிலை ஏற்பட்டு பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
