×

சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுமக்கள் திரண்டு மறியல்; மின்வாரிய ஆபீசை முற்றுகை

 

பொன்னேரி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் திரண்டுவந்து சாலை மறியல் நடத்தினர். மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கோதாமேடு, குமரன் காலனி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 9 மணி அளவில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கடும் புழுக்கத்திலும் கொசுத் தொல்லையாலும் அவதிப்பட்ட மக்கள், மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், அப்பகுதிக்கான லைன்மேன் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் திரண்டுவந்து அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘’கடந்த ஒருவாரகாலமாகவே இந்த பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னை நீடித்து வருகிறது. இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவிக்கிறோம்.பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மின்சாரத் துறை அமைச்சர் தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் யதார்த்தத்தில் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படா விட்டால் குழந்தைகளுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். இதனிடையே, மேற்கண்ட பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன் பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள மேலூரில் நேற்றிரவு தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து பொதுமக்கள், மேலூர்-பட்டமந்திரி இணைப்பு சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்திப்பட்டு, ஸ்ரீதேவி நகர் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் தொடர் மின்வெட்டு தொடர்பாக புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்றிரவு அத்திப்பட்டு ரயில் நிலையம் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘’எங்கள் பகுதியில் தொடர் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க முடியவில்லை. சீரான மின் வினியோகம் வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்கவேண்டும்’’ என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘’ உங்கள் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

திருத்தணி
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகப்பா நகர் பகுதியில் நேற்றிரவு 110 கிலோவாட் மின்திறன் கொண்ட மின்மாற்றி திடீரென வெடித்து தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்களும் மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்மாற்றியில் இருந்த அனைத்து இணைப்புகளையும் துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து ஒரு மணி நேரத்துக்கு போராடி தீயை அணைத்தனர். அந்த மின்மாற்றி முற்றிலும் எரிந்து நாசமானது. இதன்காரணமாக இதனால் முருகப்பா நகர் பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ‘’திருத்தணி பகுதியில் உள்ள கம்பங்கள், கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை முறையாக பராமரிக்காமல் இருப்பதால்தான் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது’’ என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆலந்தூர்
ஆலந்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், கடும்பாடி அம்மன் கோயில் தெரு, சவுரி தெரு, ஜேம்ஸ் தெரு, ஜிலானி சாகிப் தெரு, லப்பை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது. நேற்று நள்ளிரவு லப்பை தெருவில் 9 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது. பல மணி நேரமாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்ட மக்கள் நள்ளிரவில் ஆலந்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பரங்கிமலை போலீசார் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள், ‘’மின்வாரிய பொறியாளர் நேரில் வந்து தெரிவிக்கவேண்டும். அப்போதான் கலைந்து செல்வோம்’ என்றனர். இதையடுத்து மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுமார் வந்து, ‘’ஒவ்வொரு இடத்திலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியாக சரிசெய்து வருகிறோம். உங்கள் பகுதியில் ஏற்படும் மின்வெட்டை உடனே சரி செய்கிறோம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Chennai ,Electricity Board ,Ponneri ,Gothamedu ,Kumaran… ,
× RELATED லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் – ராமதாஸ்