மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து கற்பிக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

சென்னை: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,085 மாணவ, மாணவியர் மற்றும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த 1,005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ரிப்பன் கட்டிட வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார். இதில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு 2090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டினார். விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற வருகை தந்துள்ள மாணவர்களின் சிரித்த முகத்தை காணும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த மேடையில் மாணவர்களாகிய நீங்கள் வாங்குகின்ற ஊக்கத்தொகை உங்களுடைய பெற்றோருக்கு வாழ்வில் நோபல் பரிசு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அடைவார்கள். இதேபோன்று பள்ளி ஆசிரியர்களும் கூடுதல் மகிழ்ச்சி அடைவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை ஒரு சிற்பி கல்லை செதுக்கி சிலையாக்குவதைப் போல உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று அழகு பார்கிறார்கள். அதனைப் புரிந்து கொண்டு மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து நன்கு கற்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் நட்பாக பழகிட வேண்டும்.

அதேபோன்று மாணவர்கள் எந்தெந்த பாடப்பிரிவுகளில் ஆர்வமுள்ளவர்கள் என்று கண்டறிந்து அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்து அவர்களது கல்வி ஆர்வத்தை உற்சாகப்படுத்தி, கற்பித்திட வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறீர்களோ, அதேபோல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் ஊக்கம் அளித்து கல்வி கற்பித்திட வேண்டும். அவர்களுக்கு ஊக்கமான வார்த்தைகளையும் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் இன்று பன்னாட்டு நிறுவனங்களில் உயர் அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று மாணவர்களாகிய நீங்களும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும் எத்தனை உயர்ந்த நிலைக்கு சென்றாலும் உங்களுடைய உயர்வுக்கு விதைவிதைத்த பள்ளியை மறக்காமல் அப்பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: