×

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஏழுமலையான் கோயில் கட்ட 10.33 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

 

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் ஒதுக்குமாறு மாநில முதல்வருக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி அசாம் மாநில முதல்வர் ஹிமந்தபிஸ்வா சர்மா, காம்ரூப் மாவட்டம் சோனாபூரில் 10.33 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இடத்தை பி.ஆர். நாயுடு மற்றும் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து அசாம் பெருநகர துணை ஆணையர், 10.33 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து அதற்கான ஆவணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான எஸ்டேட் அதிகாரி சுவர்ணம்மா மற்றும் நிர்வாக பொறியாளர் சுரேந்திரரெட்டி ஆகியோரிடம் நேற்று வழங்கினார். இதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். இதன்மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், ஏழுமலையானை வணங்கி ஆசி பெறுவதுடன், ஆன்மிகமும் செழிக்கும் என பி.ஆர். நாயுடுவும், செயல் அதிகாரி முத்தாடா ரவி சந்திராவும் தெரிவித்தனர்.

Tags : Assam ,Temple of Eummalayan ,Gawagathi ,Thirumalai ,Thirupathi Devasthanam ,Devastana Trustee Committee ,P. R. ,Naidu ,
× RELATED டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா...