புதுடெல்லி: மருத்துவத்துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை கங்கனா ரனாவத் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலின் போது, அங்கிருந்த காமா மருத்துவமனை ஊழியர்கள் காட்டிய வீரம் ஈடு இணையற்றது. அந்த இக்கட்டான சூழலில் சுமார் 400 உயிர்களைக் காப்பாற்றிய செவிலியர்கள், வார்டு பாய்ஸ் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் தியாகத்தை மையமாக வைத்து ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை அடையாளம் காண்பதில் முக்கிய சாட்சிகளாக விளங்கிய இவர்கள், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இந்நிலையில், தனது புதிய படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாஜக எம்பியான நடிகை கங்கனா ரனாவத், செவிலியர் பணி என்பது சமூகத்தில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘செவிலியர் பணி கொச்சைப்படுத்தப்படுகிறது. மக்களின் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் மாற்றம் வர வேண்டும். செவிலியர்களுக்கு உரிய மரியாதையை நாம் தருவதில்லை.
குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு எனப் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் அவர்கள் பணியாற்றுகின்றனர். எங்களது படத்தில் ஒரு வசனம் வரும், அதாவது செவிலியரைப் பார்த்தால் நேரம் கிடைக்கும் போது நாலு வார்த்தை பேசிக்கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் நோயாளிகளைச் சுத்தம் செய்வது முதல் மருத்துவமனை சீராக இயங்குவது வரை பல முக்கிய பணிகளைச் செய்கின்றனர். இந்த படம் வெளியான பிறகு ஒரு சில நிமிடங்களாவது அவர்களைப் பற்றிய மக்களின் பார்வை மாறினால் அதுவே பெரிய வெற்றியாகும்’ என்று கூறினார். இந்த படம் வரும் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
