புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் விவகாரத்தில் தனக்கு எதிராக பெரிய சதி நடந்ததாக அசோக் கெலாட் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த காலகட்டத்தில் ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெலாட் (73), அப்பதவியை விட்டுவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க கட்சி மேலிடம் திட்டமிட்டது. இருப்பினும், சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். இறுதியில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தற்போது மவுனம் கலைந்துள்ள அசோக் கெலாட், தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் பதவியின் கவுரவம் எனக்கு நன்றாகத் தெரியும். மகாத்மா காந்தி, பண்டித நேரு, மோதிலால் நேரு, சர்தார் பட்டேல் போன்ற மாபெரும் தலைவர்கள் வகித்த அந்த பதவியை சோனியா காந்தி எனக்கு வழங்கியிருந்தால், நான் எதற்காக மறுக்கப் போகிறேன்?
நான் முதல்வர் பதவியில் நீடிக்க ஆசைப்பட்டு கட்சித் தலைவர் பதவியை வேண்டாம் என்று சொன்னதாக ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டது. இது எனக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய சதி ஆகும். வெளிநாடுகளில் உள்ள எனது நெருங்கிய நண்பர்கள் கூட, நான்தான் அந்த கிளர்ச்சியை முன்னின்று நடத்தியதாக தவறாக நம்புகின்றனர்’ என்றார். மேலும் ‘கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் பிரச்னையின் போது கட்சி மேலிட பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அஜய் மக்கான் ஆகியோரால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.
சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் அந்த சூழலை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக சோனியா காந்தியிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டேன். காங்கிரஸ் கட்சி எனக்கு எல்லாவற்றையும் வழங்கி உள்ளது. இப்போது நான் எந்தப் பதவிக்கும் பின்னால் ஓடவில்லை. ஆனால் பார்வையாளர்கள் திடீரென வந்ததால் எனக்கு தேவையற்ற அவப்பெயர் ஏற்பட்டது. கிளர்ச்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சோனியா காந்தியிடம் அன்றே விளக்கிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
