×

ராணுவ வீரர் அடித்துக்கொலை: மனைவி உள்பட 4 பேர் கைது

 

திருமலை: கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ராணுவ வீரர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ரியாலமடுகு கிராமத்தை சேர்ந்தவர் குமார்கவுட் (50), ராணுவ வீரர். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குமார்கவுட் பணியில் இருந்ததால், அவரது குடும்பத்தினர், மேடக் நகரில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பத்மா, மகள்களுடன் தனது தாய் வீடான கோல்சாரம் அடுத்த வரிகுண்டம் கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன், விடுமுறையில் ஊருக்கு வந்த குமார்கவுட், மேடக்நகரில் உள்ள ராணுவ குடியிருப்பில் தங்கினார். இந்நிலையில் குமார் கவுட் தங்கியுள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம், அவரது மனைவி பத்மா, மாமனார் ராமகிருஷ்ண கவுட், மாமியார் எல்லம்மா, மைத்துனர் சந்தோஷ் மற்றும் சிலர் வந்தனர். அங்கிருந்த குமார்கவுட்டிடம், வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பத்மா, அவரது தரப்பினர், இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் குமார்கவுட்டை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் பலத்த காயமடைந்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமார்கவுட் உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பத்மா, ராமகிருஷ்ணகவுட், எல்லம்மா, சந்தோஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirumala ,Kumar Gaud ,Ryalamadugu ,Medak district of Telangana ,
× RELATED நீட் வினாத்தாளை கொண்டு செல்லும்...