- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்க பாஜக அரசு
- புது தில்லி
- மேற்கு வங்கம்
- ராஜ்ய சபா
- சுகேந்து சேகர் ராய்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- மேற்கு வங்க சட்டமன்றம்
புதுடெல்லி,: மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி சுகேந்து சேகர் ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ரிதாப்ரதா பானர்ஜி, 58 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தனி அணியை உருவாக்கி, சட்டசபையில் சோபந்தேவ் சட்டோபாத்யாயாவிற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், தேர்தல் தோல்விக்கு அபிஷேக் பானர்ஜியின் தலைமையே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 லோக்சபா எம்.பி-க்கள் பிரிந்து செல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி சுகேந்து சேகர் ராய், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், ‘மேற்கு வங்க வரலாற்றில் முதன்முறையாக, திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டு கால அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் பாஜக-விற்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். ஊழல், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் ஏற்பட்ட படுதோல்வியே ஆட்சி மாற்றத்திற்குக் காரணம். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செயல்படத் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
