×

அரசு அலுவலர் பணிக்காக அதிநவீன ஹெலிகாப்டர்: தெலங்கானா அரசு முடிவு

 

திருமலை: அரசு அலுவலர் பணிக்காக அதிநவீன ஹெலிகாப்டரை மாதம் ரூ.5 கோடி வரை வாடகை செலுத்தி வாங்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானாவில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று ஆய்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு விரைவாக செல்லும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் முக்கிய பிரமுகர்கள் ெஹலிகாப்டரில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ஏர்பஸ் எச்-160 ரக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க விரைவில் ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது. தற்போது மாநில அரசிடம் உள்ள அகஸ்தியா-169 ஹெலிகாப்டரில் 8 இருக்கைகள் மட்டுமே உள்ளது. ஆனால் ஏர்பஸ் எச்-160 ரக ஹெலிகாப்டர் அதிநவீன தொழில் நுட்பங்களுடன், மிகவும் மேம்பட்ட இரட்டை இஞ்ஜின் கொண்ட ஹெலிகாப்டர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 255 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். ஒரே நேரத்தில் 4.30 மணி நேரம் பயணம் செய்ய முடியும். ஆட்டோ பைலட் மற்றும் நவீன வழிசெலுத்தல் அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில், இஞ்ஜின்களின் சத்தம் உள்ளே கேட்காதவாறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த புதிய ஹெலிகாப்டருக்காக மாதம் ரூ.5 கோடி வரை வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

Tags : Telangana Government ,Thirumalai ,Telangana ,
× RELATED போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம்...