கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி பலி: 126 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஷிகெல்லா நோய் பாதித்து நான்கரை வயது சிறுமி உயிரிழந்தார். கோழிக்கோடு அருகே உள்ள அண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி நிலா. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சிறுமிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நிலாவை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுமிக்கு ஷிகெல்லா நோய் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறுமி உயிரிழந்தார்.

ஷிகெல்லா நோய் ஒரு வகையான பாக்டீரியா மூலம் பரவுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை தான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் கூறியது: கேரளாவில் ஷிகெல்லா நோய் பரவி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் 126 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டம் பத்தேரியில் வாந்தி காரணமாக சில பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஷிகெல்லா நோய் பரவியுள்ளதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அசுத்தமான தண்ணீர் மூலம் தான் இந்த நோய் பரவுகிறது. விடுதிகள், ஓட்டல்களில் சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: