புதுடெல்லி: மேற்கு ஆசியா போருக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், 2வது முறையாக ரூ.29 தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கான மொத்த விலை உயர்வு ரூ.89 ஆக உள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசின் விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதி செலவு, எல்பிஜிக்கான சர்வதேச அளவுகோலான சவுதி ஒப்பந்த விலையை பொறுத்தது. மேற்கு ஆசியா போரால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, வளைகுடாவில் இரு்து விநியோகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே இந்த அளவுகோல் விலை சுமார் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி செலவை கணக்கில் கொண்டால், வீட்டு உபயோகத்திற்கான ஒரு சிலிண்டரின் அடக்கவிலையே ரூ.1,600க்கும் அதிகமாகிறது.
இதனால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மீதான இழப்பு தொகை முந்தைய ஆண்டில் ரூ.41,338 கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டின் முடிவில் சுமார் ரூ.60,000 கோடியாக உயர்ந்தது. இந்த இழப்பீடு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசால் ஏற்கப்படுகிறது. இந்த இழப்புகளை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வகையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி இழப்பீட்டை வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் காஸ் விலை உயர்வு இருந்த போதிலும், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவில் வீட்டு உபயோக எல்பிஜி விலை குறைவாகவே உள்ளது. மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. நெருக்கடியான சூழலிலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிசக்தி விநியோகத்தை தடையின்றி தொடர முடிந்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் நாட்டில் எல்பிஜி மற்றும் பிற பெட்ரோலிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டருக்கு ரூ.703 இழப்பு
இறக்குமதி செலவின்படி, ஒரு சிலிண்டரின் அடக்கவிலை ரூ.1,600 ஆக உள்ளது. இதில் தற்போதைய விலை உயர்வுக்கு முன்பு ஒரு சிலிண்டருக்கு ரூ.703 இழப்பை சந்தித்து வந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
