நீட் வினாத்தாள் கசிவு, ஓஎஸ்எம் விவகாரம்: என்டிஏ, சிபிஎஸ்இ பதிலளிக்க நாடாளுமன்ற குழு உத்தரவு

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இயின் ஓஎஸ்எம் விவகாரம் குறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மற்றும் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான ஒன்றிய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கான நாடாளுமன்ற குழு நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இயின் டிஜிட்டல் மதிப்பீடு முறையான ஓஎஸ்எம் தொடர்பான சர்ச்சை குறித்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம் என்டிஏ அதிகாரிகள் இக்குழு முன்பாக ஆஜராகி அளித்த விளக்கத்தில், வினாத்தாள் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் மாதிரி வினாத்தாள் மட்டுமே புழக்கத்தில் இருந்ததாகவும் கூறினர்.

இதைத் தொடர்ந்து, இவ்விவகாரங்கள் தொடர்பாக சிபிஎஸ்இ மற்றும் என்டிஏ எழுத்துப்பூர்வ பதிலளிக்க நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் (8ம் தேதி) சிபிஎஸ்இயும் வரும் 10ம் தேதிக்குள் என்டிஏவும் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்விரு அமைப்புகளும் எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை.

வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை தவிர வேறு ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா, கடந்த 3 ஆண்டுகளில் பணியாளர் எண்ணிக்கை மற்றும் 2022ல் இருந்து மேற்கொள்ளப்பட்ட புதிய பணி நியமனங்கள், கடந்த 3 ஆண்டுகளில் என்டிஏ உயர்கல்வி துறைக்கு சமர்பித்த ஆண்டறிக்கை, கடந்த 2024ல் அமைக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு வழங்கிய 101 பரிந்துரைகள் ஒவ்வொன்றின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து என்டிஏ தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, ஓஎஸ்எம் ஒப்பந்த விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், ஸ்கேனர், ஸ்கேன் பக்கங்களின் தெளிவுத்திறன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சிபிஎஸ்இயிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Related Stories: