×

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன், மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதை தடுக்க முடியாது. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், போரூர் சுங்கச்சாவடி அல்லது சூரப்பேடு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதைப் போல, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Glamappakkam ,Chennai ,Court ,
× RELATED கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை...