×

குடும்பத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குடும்பத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், மேலும் இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 30 ஆயிரம் ரூபாய் அபாராமும் விதித்து 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக தலா 25 ஆயிரம் ரூபாயும், அபராத தொகை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மூவருக்கும் பகிர்ந்து வழங்கவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கக் கோரி சிறுவர்களின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க அரசாணை வகை செய்கிறது. அந்த அடிப்படையில் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்காததன் மூலம் விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது.

எனவே, பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கும் தலா பத்து லட்சம் ரூபாயை இழப்பீடாக தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டை கழித்துவிட்டு மீதத் தொகையை 30 நாட்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Vellore district ,
× RELATED டூவீலர் மீது கார் மோதல்: 3 பேர் பலி