×

விழுப்புரத்தில் விசிக சார்பில் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்: திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு ஏமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் விசிக சார்பில் அம்பேத்கர் வைக்கப்பட்ட சிலையை போலீசார் அகற்றியதால் அதை திறக்க சென்ற திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு ஏமாற்றத்துடன் திரும்பினர். விழுப்புரம் சிக்னல் அருகே ஜிஆர்பி தெருவுக்கு செல்லும் சந்திப்பில் விசிக சார்பில் 6 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்றுமுன்தினம் விழுப்புரத்திற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு மற்றும் ரவிக்குமார் எம்பி ஆகியோர் திறந்த வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி திண்டிவனம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் விழுப்புரத்திற்கு வந்தபோது சிலையை திறப்பதற்காக திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், உரிய அனுமதிபெறாமல் அரசு இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறி சிலையை திறக்கக்கூடாது என கூறினர். இதைதொடர்ந்து திருமாவளவன், அமைச்சர் வன்னிஅரசு ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் அம்பேத்கர் சிலையை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சென்றனர். கிரேன் மூலம் சிலையை அகற்ற முயன்றபோது அப்பகுதியினர், விசிகவினர் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா இடத்தில் வேண்டுமானால் சிலை வைத்துக் கொள்ளுங்கள். அரசு இடத்தில் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும். நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது, அனுமதி பெற்று சிலையை வைத்துக் கொள்ளுங்கள், என கூறி அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அம்பேத்கர் சிலையை வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருநது அகற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்தனர்.

Tags : VKC ,Villupuram ,Thirumavalavan ,Minister ,Vanniarasu ,GRP Street ,Ambedkar ,VKC… ,
× RELATED டூவீலர் மீது கார் மோதல்: 3 பேர் பலி