திருவள்ளூர்: பைக் மீது புது லாரி மோதியதில் ஜோசியரான கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சங்கரய்யா (56). இவரது மனைவி அமுலு (55). இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சங்கரய்யா மாதந்தோறும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்து செல்வாராம். இதன்படி இன்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சங்கரய்யா, மனைவி அமுலுவை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை கடக்கும்போது பின்னால் வந்த புதிய லாரி சங்கரய்யா பைக் பின்னாடி வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி விழுந்தபோது அமுலு மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. தனது கண்முன்னே மனைவி இறப்பது பார்த்து சங்கரய்யா கதறி துடித்துள்ளார்.
இந்த விபத்தில் சங்கரய்யா காயம் அடைந்தார். அப்பகுதியினர் உடனடியாக சங்கரய்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார அமுலு சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
