×

குவாரியில் அழுகிய நிலையில் தவெக நிர்வாகி உடல் மீட்பு: கொலையா? போலீசார் விசாரணை

கடையம்: குவாரியில் அழுகிய நிலையில் தவெக நிர்வாகி உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (37). தவெக ஆலங்குளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய பொறுப்பாளர். கடையத்தில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவரது மனைவி பெருசு தெரசா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெருசு தெரசா நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சக்திவேலுக்கு கடன் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மாதம்தோறும் 1ம் தேதி வட்டி செலுத்த வேண்டியிருந்தது.

கடந்த 1ம் தேதி சக்திவேல் மனைவியிடம் அவரது சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சக்திவேல் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பெருசு தெரசா சொந்த ஊரான கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு செல்வதாக கூறி பஸ் நிலையத்திற்கு பேக்கை எடுத்து கொண்டு சென்றுள்ளார். சக்திவேல் பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று கடையம் அருகே தெற்கு மடத்தூர் பகுதியில் மூடப்பட்ட தனியார் குவாரியில் உள்ள தண்ணீரில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில்,
சடலமாக மிதந்தது தவெக நிர்வாகி சக்திவேல் என்பது தெரிய வந்தது.

அவர் இறந்து நான்கு நாட்களுக்கும் மேலாகி விட்டதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. கடன் பிரச்னையில் சிக்கி இருப்பதால் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் எப்படி இறந்தார் என்று தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Thaveka ,Kadayam ,Sakthivel ,Sokkalingapuram ,Tenkasi district ,Alankulam ,Kadayam… ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...