×

பாஜவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்: வரும் பொதுத்தேர்தலில் போட்டி என்றும் அறிவிப்பு

சென்னை: பாஜவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். தனிக்கட்சி தொடங்குவதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து, அண்ணாமலை தனது எதிர்கால நடவடிக்கை குறித்து வலைத்தள பக்கத்தில் நேரலையில் நேற்று பிற்பகலில் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்றிலிருந்து நம்முடைய ஒரு புதிய பாதை, ஒரு புதிய இயக்கம். ஒரு புதிய அரசியல் பாதை. அடிப்படையிலிருந்து ஒரு புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு பார்க்கக்கூடிய ஒரு விதத்தில் தான் நம்முடைய செயல்பாட்டை நாம் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் சேர்ந்து இணைந்து அதை ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. என்னுடைய அரசியல் பாதை ரொம்ப வளைஞ்சு நெளிந்தது. இது எளிமையான பாதை கிடையாது. ஒரு கிராமத்தில பிறந்து, ஒரு சாதாரண குடும்பத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து வந்து ஒரு சாதாரண மனிதனாக வந்திருக்கிறேன்.

இலக்குகள் பெரியதாக இருக்கிறது. ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தோடு இன்றைக்கு ரொம்ப பண்போடு சொல்லிவிட்டு, பாஜவில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். இது தமிழர் பண்பாடு. வெளியே சென்றாலும் கூட மரியாதையோடு சொல்லிவிட்டு செல்வது நம்முடைய பண்பு என்பதுதான் எனக்கும் இலக்கணமாக இருந்திருக்கிறது. 25 வயதில் எனக்கு இன்டர்ன்ஷிப் விஜயகாந்த் கிட்ட செய்யறதுக்கு ஒரு பெரிய பாக்கியம்.

அன்றைக்கு அரசியல் என்றால், என்ன வென்றே தெரியாமல் ஒரு புதிய அரசியலை தமிழகத்தில் கொண்டு வர முடியுமான்னு யோசித்த தருணம். இன்றைக்கு 42 வயது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் போராடிக்கிட்டே இருக்கிறேன். ஒரு புதிய பாதை உருவாக்க முடியுமா?, ஒரு சிறந்த அரசியல், ஒரு சிறந்த சமூகம் கொண்டு வர முடியுமா என்று யோசித்து இருக்கிறேன். அதே நேரத்தில் நிறைய யூகங்கள். 2020ல் பாஜவில் இணைய வரும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். எனக்கும் அவருக்குமான நட்பு பெரியது.

அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் பேசி இருக்கிறேன். ரஜினிகாந்த் என்னிடம் நீங்க, டெல்லியில் இருந்து திரும்ப வரணும். என்னுடைய கட்சியில் இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். அப்போது, 3 விஷயம் தான் என் கண் முன்னாடி இருந்துச்சு. தமிழ்நாட்டுக்கு எது நல்லது?, சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர்றது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. சூப்பர் ஸ்டாருக்கு என்ன நல்லது? அவர் அரசியலுக்கு வராமல் இருக்கிறது தான் அவருக்கு நல்லது.

கோவிட் காலகட்டத்தில் அவருக்கு இருக்கக்கூடிய உடல் பிரச்னைகள், அதையே பார்த்துக்க வேண்டும். முதல்ல அவர் ஆரோக்கியமா சந்தோஷமா இருக்க வேண்டும். அண்ணாமலைக்கு எது நல்லது என்று யோசித்தேன். பாஜவில் இணைகிறேன் என்கின்ற வாக்குறுதியை மேலிட பொறுப்பாளர் சந்தோஷ் கிட்ட கொடுத்தேன். ரஜினிகாந்த் பேசிய அந்த போன் காலுக்கு முதன்முறையாக மறுத்து, ‘‘ஐயா மன்னிச்சுக்கங்க என்னால வர முடியாது” என்று சொல்லி பாஜவில் இணைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டாரை பார்த்து மன்னிப்பு கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக அவருடைய அரசியல் பாதையை அவரும் பெருந்தன்மையாக அடுத்து தீர்மானிச்சார். எதுக்கு இதை நான் சொல்றேன் அப்படின்னாங்க, சில யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான். வேறு எந்த காரணமும் கிடையாது. இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் மீது பெரும் மதிப்பும் மரியாதை வைத்திருக்கக்கூடிய மனிதன் நான். அதே நேரத்தில் பாஜவை பொறுத்தவரை இந்த 6 ஆண்டில் தமிழ்நாட்டினுடைய அடையாளத்தை விட்டு கொடுத்தது கிடையாது.

நம்முடைய தண்ணீர் நீரை விட்டு கொடுத்தது கிடையாது. அண்ணாமலை நீங்க தமிழனா? இந்தியனா? அப்படினு கேப்பாங்க. இந்தியன் என்கின்ற அடையாளத்தோடு ஒரு பெருமை மிகுந்த தமிழனாகத்தான் எல்லா இடத்திலும் இருக்கிறேன். பாஜவில் இருந்தபோது, தனியாக தேர்தலை சந்திக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டினுடைய அடையாளத்தோடு பாஜ இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் இன்னொரு கட்சிக்கும் (அதிமுக.) பிரச்னை இல்லை.

பிரதமர் மோடி மீது மிகப்பெரிய ஒரு மரியாதை வைத்திருக்கக்கூடிய மனிதன். நாட்டினுடைய பிரதமர், இந்த நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கக்கூடிய மனிதர். பிரச்னைகள் வரும்போது, நாமும் அவர்களுக்கு பிரச்னையாக இருக்க கூடாது. இது 4 நாள் பிரச்னை இல்லை. 18 மாதங்களாக எனக்கு இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளை மிக பொறுமையாக வெளியில் கூறாமல் இருந்து வந்திருக்கிறேன். 2025 டிசம்பர் 4ம் தேதி கட்சி தலைமைக்கு கூறினேன். நான் கட்சியிலிருந்து வெளியே செல்ல இருக்கின்றேன் என்று கூறினேன்.

தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார்கள். அடுத்து நாம் என்ன செய்ய போறோம்?. ஆனந்தமாக, அன்போடு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கின்றோம். இது அரசியல் இயக்கமா?, கட்சி இல்லையா அப்படின்னு நீங்க யாரும் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக தமிழகத்தில அடுத்து நடக்கக்கூடிய பொதுத்தேர்தலில் நம்முடைய கட்சி போட்டியிடும், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதற்கு நாம் தயாராக வேண்டும். நிறைய தலைவர்களை உருவாக்க வேண்டும். தன்னாவர்லர்களை, தொண்டர் படையை தயார் செய்ய வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரமாகும். ஒரு வளர்ந்த பாரதம் என்பதே லட்சியம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. அதற்கு நம்முடைய அரசியல் இலக்கணத்தை, அரசியல் மொழியை மாற்ற வேண்டும்.

மோசமான அரசியலில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பிறந்தநாள் போஸ்டர் கலாச்சாரத்தை உடைக்க வேண்டும். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். சமரசமே இல்லாத கொள்கை இருக்கக்கூடிய இயக்கமாக, கட்சியாக நாம் வர வேண்டும். நம்முடைய நோக்கம் எல்லா இடத்திலேயும் தூய்மையான அரசியல். அரசியல் என்பது ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல, தொடர்ந்து நாம் மட்டும் இருப்போம் என்பது அல்ல, 8 கோடி பேருக்கு நாம் இருக்கோம், ஐந்தரை கோடிக்கு மேல்பட்ட வாக்காளர்கள் இருக்கும் பொழுது எல்லோரையும் அரசியலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதற்கு கால நிர்ணயம் கொண்டு வர வேண்டும். எத்தனை முறை எம்எல்ஏவாக, எம்பியாக, அமைச்சராக இருக்க வேண்டும் என்பது உள்பட. இதில் நான் கூட விதி விலக்கு இல்லை. இந்த இயக்கம் கட்சியாக மாறுகின்ற முதல் நாளில் எல்லாம் சொல்ல போகிறோம். அரசியலுக்கு புதியவர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். நம்மை தாண்டி இந்த இயக்கம் நிற்க வேண்டும். ‘வி த லீடர்’ (www.wetheleaders.org) அப்படிங்கற அமைப்பு, ஏற்கனவே 2020ல் நாங்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு.

இந்த லிங்கில் என்னுடைய அமைப்பு, கட்சியில சேர்கிறவர்கள் இணைந்து கொள்ளலாம். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. ஆளுங்கட்சி இருக்கு, நிறைய எதிர்கட்சி இருக்கு, எல்லோரும் இருக்கட்டும், சந்தோஷமா இருக்கட்டும், அவங்க அவங்க கொள்கையை சொல்லட்டும், நம்முடைய கொள்கையும் வருகின்ற காலத்தில் நாம் எல்லோரும் இணைந்து நம்முடைய கொள்கையை சொல்ல போறோம். அடுத்த தலைமுறைக்கு தேவையான வசதியை செய்து கொடுக்கவில்லை என்றால், அது எந்த யோசனையாக இருந்தாலும் அது அழியும் என்பதுதான் காலத்தினுடைய கட்டாயம்.

நாம் எல்லோருமே சாதாரணமானவர்கள் தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கொண்டு போக வேண்டும். என்னோடு வர நினைக்கக்கூடிய எல்லோருக்கும் கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் நிதானம் அவசியம். தமிழகத்திற்கு ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் அந்த செங்கலை வைக்கும் பொழுது, அந்த செங்கலுக்கு கியூரிங் ஆகறதுக்கு ஒரு நேரம் வேண்டும். அந்த செங்கல் பிடிமானத்தோடு நிற்க வேண்டும். \\”மாற்று கட்சியில் இருக்கிறேன். உடனே கிளம்பி வரட்டுமா?\\” என்று கேட்கிறார்கள்.

நாம் அனைவரும் இணைய வேண்டும், மாற்றம் உருவாக வேண்டும், மாற்றுவோம். கொஞ்சம், கொஞ்சமாக அரசில் கட்சியாக மாறுவோம். அதுவரை பொறுமை, பொறுமை, பொறுமை. அவசரமா ஒரு வெயிட்ட தூக்கி முதுகு பிடிச்சு கால் பிடிக்கிறதை விட, சரியான ஒரு ஒரு திசையில் சென்று அதை செய்வோம். இன்றிலிருந்து நம்முடைய ‘வீ த லீடர்ஸ்’ பணிகளை ஆரம்பிக்கிறோம். கோவை ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சென்டர்பார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் அதை உருவாக்குறோம். உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேரை இங்கிருந்து நாம் அனுப்புறோம்.

\\”நாம் மாறுவோம், மாற்றம் தானாக நடக்கும். மாறுவோம் மாற்றுவோம் இந்த இரண்டையும் செய்வோம். யார் மீதும் வன்மம் கிடையாது. அதே நேரத்துல நம்முடைய சமூக வலைதளத்தில் இருக்க கூடியவங்களை நான் வாரியர்ஸ்னு சொல்ல மாட்டேன், என்னை பொறுத்தவரை ஒரு மாற்றத்தை கொடுக்க கூடியவங்க நீங்க. சண்டை களத்தில சண்டை போடுறது நம்ம வேலை இல்லை. மாற்றத்தை கொடுக்க கூடியது நம்முடைய வேலை. இதுவரை வந்த பாதையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு இருந்தாலும் நம்முடைய அனுபவத்தை வைத்து அதற்காக யாரையும் திட்டி தீர்க்க அவசியம் இல்லை.

சமூக வலைதளத்தில் நாம் பொறுப்பாக இருப்போம். தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர போறோம். அதனால் தான் நான் இன்ஸ்டாகிராம் லைவ்ல வந்தேன். ஒரு புதிய தலைமுறையை நாம் அரசியலுக்குள்ள கொண்டு வர வேண்டும். அவர்களை ஒதுக்கி வைக்க முடியாது. பெரியவர்கள் நடந்து போறதுக்கு கூட இன்றைக்கு ஒரு பார்க் கிடையாது. 60 ஆண்டு காலம் இந்த நாட்டில் வாழ்ந்தும் கூட கடைசி 20 ஆண்டுகள் நிம்மதியாக இருப்பதற்கான கட்டமைப்பை நாம் உருவாக்கவில்லை.

ஒரு பக்கம் ஜென் சி, ஜென் ஆல்பா இருக்கிறார்கள். அந்த வேகத்துக்கு தீனி போடணும். நிச்சயமாக நமக்கு நல்லது நடக்கும். எல்லா அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் நான் பாஜவை பார்ப்பேன். நேராக கண்ணை பார்த்து சொல்லிட்டு, சில தவறுகள் இருந்தாலும் அதையும் சொல்லிவிட்டு போகக்கூடியது தான் என் பண்பு. நாகரிகமான அரசியலை முன்னெடுப்போம், சமூக வலைத்தளத்தில ஆபாசம் வேண்டாம், சமூக வலைதளத்தில் நல்லதை பேசுவோம்.

எல்லோரும் அவங்க, அவங்க இடத்துல இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும். நிச்சயமாக நம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய புரட்சியை, மாற்றத்தை தமிழகத்திற்காக, ஒரு பாரத நாட்டுக்குள்ள இந்திய நாட்டுக்குள்ள முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவது மட்டும்தான் நம்முடைய குறிக்கோள். அதற்காக நம்முடைய வாழ்வை அர்ப்பணிப்போம். மாறுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

* 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு
அண்ணாமலை பாஜவில் வெளியேறியதை அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாஜவில் உள்ள பலரும் அண்ணாமலையின் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வரும் நாட்களில் என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது இயக்கத்தில் நேற்று மாலை வரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Annamalai ,BJP ,Chennai ,Modi ,Home Minister ,Amit Shah ,Nitin Nabin ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...