பெங்களூரு: பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் கர்நாடாவை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக மாநில உளவுதுறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று காலை தாவணகெரே மாநகரில் உள்ள பீடி நகரில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஜமீர்கான் என்பவரை கைது செய்தனர். அதே சமயத்தில் தும்கூரு மாநகரின் ராம்நகரில் வசித்து வந்த அல்லா பக்சுவை கைது செய்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘துரந்தர்’ இந்தி திரைப்படத்தில் ஹீரோ பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து எதிரிகளை அழிப்பது போல், இந்தியாவில் அசம்பாவித சம்பவங்கள் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் எந்தெந்த இடத்தில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவம் நடத்த திட்டமிட்டிருந்தனர், அதற்கான வரைப்படம், பயங்கரமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் நாசகார வேலையில் ஈடுப்படுத்த சில இஸ்லாமிய இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை தும்கூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கூடுதல் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்.
