×

எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மம்தா பானர்ஜியிடம் போலீசார் விசாரிக்க முடிவு

 

 

கொல்கத்தா: எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாணவர் தலைவர் உஸ்மான் பின் ஹாதி படுகொலை செய்யப்பட்டார். இது அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மை குற்றவாளிகள் சிலர் வங்கதேசத்தில் இருந்து தப்பி, மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்நிலையில், கொல்கத்தாவின் தர்மதலா பகுதியில் கடந்த 2ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில், பேசிய அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ‘வங்கதேசத்தில் நடந்த ஒரு முக்கிய கொலை வழக்கு குறித்த முழு விவரங்களும் எனக்கு தெரியும்: அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியும்’ என்றார். மம்தா பானர்ஜியின் இந்த உரையை தொடர்ந்து, சிலிகுரியை சேர்ந்த வழக்கறிஞர் ரிங்கி சென் சட்டர்ஜி என்பவர் சிலிகுரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘மம்தாவின் பேச்சு, இந்த கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்புகளுக்கோ அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கோ ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போன்ற தவறான செய்தியை மக்களிடையே கொண்டு சேர்க்கும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற போலீசார், மம்தா மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிந்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கல் என திரிணாமுல் காங்கிரசார் குற்றம்சாட்டி வருகின்றனர். கட்சிக்குள்ளும் வெளியிலும் இவ்வளவு நெருக்கடிகள் மற்றும் எப்.ஐ.ஆர் வழக்குகள் பாய்ந்த போதிலும், மம்தா பானர்ஜி, இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஊடக அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார். அதே நேரத்தில் எப்.ஐ.ஆர் பதிவை தொடர்ந்து மம்தா பானர்ஜியை சைபர் க்ரைம் போலீசார் விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Mamata Banerjee ,Kolkata ,Chief Minister ,Bangladesh ,Usman Bin Hadi ,
× RELATED புதிய அப்டேட் விரைவில் வருகிறது:...