அதிகாரிகள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் ரகசிய தொடர்பு; குமரியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கைப்பற்றிய ஆவணங்கள் ஆய்வு: விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியதில் முறைகேடு

 

நாகர்கோவில்: குமரியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கைப்பற்றிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக கூறப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பத்திரபதிவு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் கொட்டாரம் மற்றும் இடலாக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக சுசீந்திரத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் செயல்படுகிறது.

இந்த அலுவலகத்துக்கு நேற்று மதியம், லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா, சிவசங்கரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று சோதனை மேற்கொண்டனர். இரவு 8 மணி வரை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடந்தது. இந்த சோதனையில் அலுவலக பீரோவில் இருந்து ரூ.38,400 பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற சோதனையில், ரூ.3500 மட்டும் சிக்கியது. இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சோதனையில் சில முக்கிய பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இரு அலுவலகங்களில் இருந்தும் ரூ.41,380 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக கொட்டாரம், இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலங்களில் ரியல் எஸ்டே்ட உரிமையாளர்கள் சிலருக்கு ஆதரவாக பத்திரப்பதிவுகள் நடந்து இருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள பகுதிகளுக்கும் பத்திரப்பதிவு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் சிக்க கூடும் என கூறப்படும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: