ரூ.342.60 கோடி மதிப்பில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்க திட்ட பணி தீவிரம்: அமைச்சர் ஆனந்த் ஆய்வு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி அரசுக்கு சொந்தமான காலி நிலங்கள் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு வெளியேற்றப்படும். அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலிருந்தும் மழைநீர் வெளியேறி பக்கிங்காம் கால்வாயில் கலக்கும். பின்னர், முட்டுக்காடு மற்றும் கல்பாக்கம் முகத்துவாரங்களில் வீணாக கடலில் கலக்கிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டம், கிழக்கு கடற்கரையில் வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும் 2025 – 2026 ஆண்டின் நிதிநிலை அறிவிப்பின்போது, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களை ஒருங்கிணைத்து 1.665 டி.எம்.சி. அளவில் 3 மீட்டர் உயரம் வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6வது புதிய மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள கோவளம் உபவடி நிலம் மற்றும் அரசு நிலம் சுமார் 5,161 ஏக்கர் நீர்வள துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ரூ.342.60 கோடி மதிப்பில், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிர்வாக அனுமதிக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில், இந்த திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நெம்மேலி பக்கிங்காம் கால்வாயில் (உபவடி நிலத்தில்) முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரியில் மாமல்லன் புதிய நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு, மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை ரத்து செய்து விடுவார் என மீனவர்கள் பரபரப்பாக பேசி வந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், நேற்று நீர்த்தேக்கம் திட்டம் குறித்து நெம்மேலியில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தின் மாதிரி வரைபடத்தை காட்டி, எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது, எவ்வளவு மழைநீர் சேமித்து, குடிநீராக மாற்றி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் தெளிவாக விளக்கி கூறினர்.

ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் விஜயராஜ், தியாகராஜன், செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன், டிஆர்ஓ கணேஷ் குமார், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஆர்டிஓ பாலாஜி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சாந்தி, நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: