சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இரவு 11:05 மணி முதல் அதிகாலை 3:05 மணி வரை சில மின்சார ரயில் சேவைகள் முழுமையாகவும், பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து ஆதாரமாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே முக்கிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாகவே நாளை 5.6.2026 வெள்ளிக்கிழமை இரவு 11:05 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 3:05 மணி வரை, சுமார் 4 மணி நேரத்திற்கு இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நாளை இரவு 11:40 மற்றும் 11:59 மணிக்கு தாம்பரம் நோக்கிப் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதே நேரம் இரவு 11:20 மணிக்குக் கூடுவாஞ்சேரியிலிருந்து புறப்படும் ரயில் மற்றும் இரவு 11:00 மணிக்குச் செங்கல்பட்டிலிருந்து புறப்படும் ரயில் ஆகியவை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது பயணங்களைத் திட்டமிட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
